சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர்: என் மின்னஞ்சலில் மாற்றம் செய்திருக்கிறார்கள்

clareசரவாக்  ரிப்போர்ட்  தலைமை  செய்தியாசிரியர்  கிளேர்  ரியுகாஸல்,  தாம் 1எம்டிபி  பற்றியும்  பிரதமருடன்  தொடர்புள்ளவர்களையும் பற்றியும்  தகவல்களை  இட்டுக்கட்டி வெளியிடுவதாக  தம்மீது  குற்றம் சாட்ட,  பாரிசான்  நேசனல்  ஒரு மின்னஞ்சலில் சில மாற்றங்களைச்  செய்து அதைப்  பயன்படுத்திக்  கொண்டிருப்பதாகக் குற்றம்  சுமத்தியுள்ளார்.

மேலும், சரவாக்  ரிப்போர்டின்  முன்னாள்  செய்தியாசிரியர்  என்று  கூறப்படும்  லெஸ்டர்  மெலாஞி,  தகவல்களை  அம்பலப்படுத்தும்  அந்த  இணையத்  தளத்தில்  பணி  புரிந்தது  கிடையாது  என்றும்  அவர்  மறுத்தார்.

நேற்று  நகர்ப்புற  நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர்  அப்துல்  ரஹ்மான்  டஹ்லான், ரியுகாஸல்  பொய்யான  செய்திகளை  வெளியிடுகிறார்  என்பதற்குப்  பல  ஆதாரங்கள்  இருப்பதாகவும்  அவற்றுள்  அவரது  மின்னஞ்சலும்  ஒன்று  என்று  கூறியிருந்தார்.

அந்த  மின்னஞ்சலும்,  சரவாக்  ரிப்போர்ட்  தகவல்களைத்  திரித்து  வேளியிடுவதற்குத்  தாம்  உதவியதாக  லெஸ்டர் அளித்துள்ள  காணொளி  வாக்குமூலமும்  போலிசில்  ஒப்படைக்கப்பட்டிருப்பதாக  பிஎன் வியூகத் தொடர்பு  இயக்குனருமான  ரஹ்மான்  கூறினார்.

அப்துல்  ரஹ்மான்  குறிப்பிடும்  தம்  மின்னஞ்சல்  “கெட்டிக்காரத்தனமாக தணிக்கை  செய்யப்பட்டுள்ளது”  என  ரியுகாஸல்  தெரிவித்தார்.

மேலும், லெஸ்டர்  சரவாக்  ரிப்போர்டில்  வேலை  செய்ததே  இல்லை  என்று  கூறிய  கிளேர்,  ரேடியோ  ஃப்ரி  சரவாக்(RFS)கில்தான்  அவர்  வேலை  செய்தார்  என்றார்.

“அவர் சிறிது  காலம் RFS-இல்  வேலை  செய்தார், சரவாக்  ரிப்போர்டில் கிடையவே  கிடையாது”, என்றார்.