பெர்லிஸ் அம்னோ தொகுதிகள் அவற்றின் ஆண்டுக் கூட்டங்களைத் தொடக்கிவைக்க யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம் என மாநில தொடர்புக் குழுத் தலைவர் ஷாஹிடான் காசிம் கூறினார்.
அம்மாநிலத்தில் உள்ள மூன்று அம்னோ தொகுதிகளும்- கங்கார், ஆராவ், பாடாங் புசார்- அம்னோ தலைவர், துணைத் தலைவர், உதவித் தலைவர்கள் அல்லது உச்சமன்ற உறுப்பினர்களில் ஒருவரை அழைப்பதற்குத் தடை ஏதும் இல்லை என்றாரவர்.
“இந்த விசயத்தில் பெர்லிஸ் அம்னோ திறந்த மனத்துடன் நடந்துகொள்ளும். ஏனென்றால் (அம்னோவில்) நாங்கள் எல்லாரும் ஒரு குடும்பம்”, என ஷாஹிடான் கூறினார்.
பிரதமர் துறை அமைச்சரும் ஆராவ் அம்னோ தொகுதித் தலைவருமான ஷாஹிடான், சில தொகுதிகள் கட்சித் தலைவர் முகம்மட் நஜிப் ரசாக், துணைத் தலைவர் முகைதின் யாசின், உதவித் தலைவர் ஷாபி அப்டால் ஆகியோருக்கு அனுப்பிய அழைப்புகளை இரத்துச் செய்து வருவது பற்றிக் கருத்துரைத்தபோது இவ்வாறு கூறினார்.
– Bernama