கிறிஸ்துவர்களைக் குற்றம்சாட்டிய கல்வி அமைச்சருக்குக் கண்டனம்

churchமாட்ஸிர்  காலிட்  கல்வி  அமைச்சராக  நியமிக்கப்பட்டு  ஒரு  மாதம்கூட  ஆகவில்லை  அதற்குள்  வாயைக்  கொடுத்து  வாங்கிக்  கட்டிக் கொண்டிருக்கிறார். சரவாக்  ரிப்போர்ட்  செய்திகள்  முஸ்லிம்களைப்  பிளவுபடுத்த  கிறிஸ்துவர்களும்  யூதர்களும்  மேற்கொண்டிருக்கும்  முயற்சி  என்று  சொல்லி  வம்பில்  மாட்டிக்  கொண்டிருக்கிறார்.

அது ஒரு  அநியாயமான  கூற்று  எனத்  திருச்சபைகள்  மன்றம் இன்று  கூறியது.

“முதலாவதாக,  கிறிஸ்துவர்களாகிய  எங்களை  யூதர்களுடன்  இணைத்துப்  பேசுவது  தவறு. யூதர்களுடன்  தொடர்புப்படுத்திப்  பேசுவதே  தவறு  என்கிறபோது நாங்கள்  மலாய்க்காரர்களையோ  மற்ற  இனத்தவரையோ  பிளவுபடுத்த  முயல்கிறோம்  என்பது அதைவிடவும்   மோசமானது”, எனத்  திருச்சபை  மன்றத்தின்  தலைமைச்  செயலாளர்  ஹெர்மன்  சாஸ்திரி  கூறினார்.

அமைச்சர்  ஒருவர்  இப்படிப்  பேசியிருப்பது  கிறிஸ்துவர்களிடையேயும்  மிதவாத  மலேசியரிடையேயும்  கலக்கத்தை  உண்டு  பண்ணியுள்ளது.

“நாம்  தேசிய  நல்லிணத்தையும்  ஒற்றுமையையும்  வளர்க்க  வேண்டும்.  தீய எண்ணத்தையும்  பிரிவினைவாதத்தையும் வளர்க்கக்  கூடாது”,  என்றாரவர்.

அமைச்சர்  இப்படிப்  பேசியதற்கு  விளக்கமளிக்க  வேண்டும். தீமை  விளைவிக்கக்கூடிய  வகையில் பேசியதற்காக  அவர்  மன்னிப்பு  கேட்பதுகூட  நல்லதுதான்  என்றாரவர்.

“அவர்  பொய்யான  குற்றச்சாட்டுகளைச்  சுமத்தக்கூடாது, அது  ஆபத்தானது.  தேசிய  ஒற்றுமையைக்  கெடுக்கக்கூடியது”, என  சாஸ்திரி  கூறினார்.