பெர்சே-எதிர்ப்புக் குழுவிடம் போலீஸ் விசாரணை

redசிவப்புச்  சட்டை  அணிந்த  பெர்சே- எதிர்ப்புக்  குழுவினரை  போலீசார்  விசாரணைக்கு  அழைத்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை  அவர்கள்  சோகா  பேரங்காடிக்கு  முன்புறத்தில்  ஒன்றுதிரண்டது  பற்றி  அவர்களிடம்  விசாரிக்கப்படும்.

“அதன்  ஏற்பாட்டாளர்களும்  அதில்  கலந்துகொண்டவர்களும்  இன்று  மூன்று  மணிக்கு  டாங்  வாங்கிக்கு  அழைக்கப்பட்டு  அவர்களிடம்  வாக்குமூலம்  பதிவு  செய்யப்படும்”  என்று டாங்  வாங்கி  மாவட்ட  போலீஸ்  தலைமையகப்  பேச்சாளர்  தெரிவித்தார்.

கடந்த  செவ்வாய்க்கிழமை  அக்குழுவினர் சுங்கை  புசார்  அம்னோ  தலைவர்  ஜமால்  முகம்மட்  யூனுஸ்  தலைலையில்  சோகோ விற்பனை  வளாகத்துக்கு  வெளியில்  ஒன்றுதிரண்டு  வார  இறுதியில் நடைபெறவுள்ள  பெர்சே 4 பேரணிக்கு  எதிர்ப்புத்  தெரிவித்தனர்.

அங்கு  நடந்த  கூட்டத்தில்,  ஒருவர்  கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த  மற்றவர்களால்  தடிகளால்  அடி அடியென்று   அடிக்கப்பட்டார். அடிகளைத் தாங்கிக்  கொண்டே  அவர்  “மெய்மறந்த நிலை”க்குச்  சென்று  விட்டார். அக்காட்சி  அப்படியே  படம்  பிடிக்கப்பட்டு  இணையத்தில்  பதிவேற்றம்  செய்யப்பட  அந்தச்  சிவப்புச்  சட்டையினர்  இப்போது  பிரபலமாகி  விட்டனர்.

சிவப்புச்  சட்டைகள்  இனி  பாராங்குகளை  வைத்துப்  பயிற்சி  செய்வார்களாம். பெர்சேயில்  உள்ள  ரவுடிகளிடமிருந்து  காத்துக்கொள்ள  அப்படிப்பட்ட  பயிற்சி  தேவையாம்.  ஜமால்  கூறினார்.

ஆனால்,  அதை  அப்பட்டமான மிரட்டல்  என  வருணித்த  போலீஸ்  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  காலிட்  அபு  பக்கார்  அதை  போலீஸ் பார்த்துக்  கொண்டிராது  என்று  எச்சரித்துள்ளார்.