அம்பிகா: தலைவர்கள் தருவது குப்பைகள், பெர்சே அளிப்பது நம்பிக்கை!

garbage1இந்நாட்டில் மக்களின் உரிமைகள் குறித்து ஆட்சியில் அமர்ந்திருக்கும் தலைவர்களுக்கு நினைவூட்ட நடத்தப்படும் மக்கள் பேரணி என்றால் அது பெர்சே இயக்கம் நடத்தும் பேரணிதான்.

பெர்சேயின் ஏற்பாட்டில் ஆகஸ்ட் 29-30 இல் நடக்கவிருக்கும் பெர்சே 4 பேரணி தலைவருகளுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பேரணி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்டது என்று நாட்டின் தலைவர்கள் அவர்களின் வழக்கமான வசைபாடலை பாடி வருகின்றனர்.

இப்பேரணி சாதிக்கப் போவது என்ன? பங்கேற்பவர்களுக்கு அடி, உதை, சிறை ஆகியவற்றை தவிர வேறொன்றும் இல்லை என்று பெர்சேயின் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

பெர்சே பேரணியை நினைத்து குலைநடுங்கி நிற்பவர்கள் மற்றும் குறைகூறுபவர்கள் ஆகியோரின் கூற்றை நிராகரித்த பெர்சேயின் முன்னாள் இணைத் தலைவர் அம்பிகா, மலேசியர்களுக்கு எது ஜனநாயகம், எது ஜனநாயகம் இல்லை என்பதைப் புரிய வைத்து அவர்களின் மனப்பாங்கை மாற்றிய கருவி பெர்சே என்றார்.

garbage2பெர்சே மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அவநம்பிக்கைவாதிகள் என்ன வேண்டுமானாலும் கூறலாம். அவர்களின் கூற்றுக்கு மாறாக பெர்சே அதன் முத்திரையை மக்களின் மனதில் பதித்து விட்டது என்று அம்பிகா மலேசியாகினியிடம் கூறினார்.

குப்பைகளை பரிமாறும் தலைவர்கள்

மக்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்க இயலாதவர்களாகி விட்ட தலைவர்கள் “நமக்கு முற்றிலுமான குப்பைகளைப் பரிமாறுகிறார்கள்”, என்று கூறிய அம்பிகா, மக்கள் தங்களுடைய அதிருப்திகளை ஒன்றிணைந்து கூறுவதை தலைவர்கள் கேட்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்றார்.

பெர்சேயை எதிர்த்தவர்கள் இப்போது அதனை ஆதரிக்கிறார்கள். சுருங்கக் கூறின், “பெர்சே நம்பிக்கை அளிக்கிறது”, என்று கூறிய அம்பிகா, இவ்வார இறுதியில் கோலாலம்பூர் மீண்டும் பெர்சேயின் அதிர்ச்சி அலை வெளியீட்டின் மையமாகும். அவற்றில் ஒன்று, பிரதமர் நஜிப் பதவி துறக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் அடங்கும் என்றார்.