சிறையில் உள்ள பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு அவசர அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக அவரின் குடும்பத்தினர் கருதுகின்றனர். ஆனால், சுகாதார அமைச்சின் கருத்து வேறு விதமாக இருக்கிறது.
தேவையான சிகிச்சை அன்வாருக்கு அளிக்கப்படாவிட்டால் அவரது குடும்பத்தார் சுகாதார அமைச்சின் டாக்டர் ஜெயேந்திரன் சின்னதுரைக்கு எதிராக மலேசிய மருத்துவ மன்றத்தில் புகார் செய்யப்போவதாக அன்வாரின் மகள் நூருல் இஸ்ஸா அன்வார் கூறினார்.
அக்குடும்பத்தார் நேற்று சுங்கை பூலோ சிறைக்கு அன்வாரைக் காணச் சென்றிருந்தபோது அவர், ஒரு தோள்பட்டையில் மட்டுமே இருந்த வலி இப்போது இன்னொரு தோள்பட்டைக்கும் பரவி இருப்பதாகக் கூறினார் என நூருல் தெரிவித்தார். இதற்கு அவசர அறுவைச் சிகிச்சை தேவை.
டாக்டர் ஜெயேந்திரன் பரிந்துரைத்திருக்கும் உடம்புப்பிடி மருத்துவம் மற்றும் வலி நிவாரணிகள் மூலம் இதற்குத் தீர்வு காண முடியாது, ஏனென்றால், அதற்கான வசதிகள் சிறைச்சாலையில் இல்லை என்றாரவர்.
“உடம்பைப் பிடித்து விடுதல் ஒவ்வொரு நாளும் செய்யப்பட வேண்டும், ஆனால், ஒரு மாதத்துக்கு ஒரு முறைதான் அது செய்யப்படுகிறது.
“சிறைச்சாலையில் வசதிக்குறைவின் காரணமாக அது முழுமையாகவும் செய்யப்படுவதில்லை.
“இந்நிலை தொடருமானால், எங்கள் தந்தையின் மருத்துவ உரிமைகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்”, என அந்த லெம்பா பந்தாய் எம்பி கூறினார்.