பெர்சே கருத்தரங்கில் சிவப்புச் சட்டையினர் கலாட்டா

 

Reddisturbsyellowஇன்று பாயான் பாருவில் நடைபெற்ற பெர்சே கருத்தரங்கில் சிவப்பு சட்டையினர் நுழைந்ததின் விளைவாக கருத்தரங்கு சுமார் 30 நிமிடங்களுக்குத் தடைபட்டது.

அந்த கருத்தரங்கு தொடங்கிய சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் பாயான் பாரு அம்னோ தகவல் பிரிவு தலைவர் ரிட்ஷ்வான் பாக்கார் மற்றும் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் ராபிஸால் அப்துல் ரஹிம் ஆகியோரின் தலைமையில் சுமார் 50 பேர் அங்கு வந்தனர்.

கருத்தரங்கை வழிநடத்தியை பிகேஆர் பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஸி ஸின் அவர்களை வரவேற்று கருத்துப் பறிமாற்றத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அந்த சிவப்புச் சட்டையினர் நேராக மேடைக்குச் சென்று அப்போது பேசிக் கொண்டிருந்த மாணவர் தன்னார்வலர் அடாம் அட்லியிடம் சத்தம் போட்டனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூரில் நடந்த ஒரு பேரணியில் அடாம் பிரதமர் நஜிப்பை அவமானப்படுத்தியது ஏன் என்று கேட்டனர்.

பின்னர், அவர்கள் பிகேஆர் தலைவரை குறிவைத்து சிவப்புச் சட்டை கூட்டம் பற்றி அவரது முகநூலில் அவதூறுகளைப் பதிவு செய்தது ஏன் என்று சத்தம் போட்டனர்.

சூழ்நிலை பதற்ற நிலையை எட்டியதும் அங்கிருந்த போலீசார் தலையிட்டனர்.

அச்சிவப்புச் சட்டையினர் அங்கிருந்து வெளியேறிய பின்னர் கருத்தரங்கு மீண்டும் தொடங்கியது.

அக்கருத்தரங்கில் பேசியவர்களில் பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, பெர்சே நிருவாகி மன்டீப் சிங் மற்றும் ஜிங்கா 13 இன் ஃபாரிஷ் மூசா ஆகியோரும் அடங்குவர்.