பாஸ் கட்சி நாட்டை ஆள வேண்டுமாம், ஹாடி ஆசைப்படுகிறார்

 

hadicommunismகடந்த ஐம்பத்தெட்டு ஆண்டுகளாக நாட்டை ஆண்டுவிட்ட அம்னோவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார்.

அம்னோவுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, மலேசியாவை ஆபத்திலிருந்து காப்பாற்றக்கூடிய ஒரு வகையான இஸ்லாத்தின் வழி நாட்டை ஆள்வதற்கு பாஸ் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அந்த அரசியல்வாதி கூறினார்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அவர் விடுத்த இந்த வேண்டுகோளில், இஸ்லாம் குறித்து அவர்கள் அஞ்ச வேண்டியதில்லை என்ற கூறிய ஹாடி அவாங், சீனர்களும் இந்தியர்களும் கம்யூனிசத்தை அரவணைத்துக் கொண்டதைக் குறிப்பிட்டார்.

முஸ்லிம் அல்லாதவர்கள் கார்ல்ஸ் மார்க்ஸிடமிருந்து கம்யூனிச தத்துவத்தை ஏற்றுக்கொண்டனர். கார்ல்ஸ் மார்க்ஸ் ஒரு சீனர் அல்லர், இந்தியர் அல்லர், அவர் ஒரு ஜெர்மன் யூதர் என்று பெருவிளக்கமளித்தார் ஹாடி அவாங்.

ஆனால், கம்யூனிஸ்ட்களுக்காக சீனர்களும் இந்தியர்களும் போராடியிருக்கிறார்கள். காட்டிற்குள் சென்று இளைத்துப் போயும் புல்லைத் தின்னும் வரையில் இருந்திருக்கிறார்கள் என்று அவர் கூறியதாக பாஸ் அகப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறே, மக்கள் பாரிசான், மசீச மற்றும் மஇகா ஆகியவற்றை ஏற்றுக்கொண்டுள்ளனர். அவை முதலாளித்துவத்தை ஆதரிக்கின்றன. அதை உருவாக்கியவர் அடாம் ஸ்மித் என்ற ஆங்கிலேயர் என்று ஹாடி அவரது போதனையைத் தொடர்ந்தார்.

மலாய்க்காரர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் பாஸ் கட்சியில் இல்லை என்றால் அம்னோவில் இருப்பார்கள், அங்கே இல்லை என்றால் இங்கே இருப்பார்கள் என்றாரவர்.

மதில் மேல் பூனையாக இருப்பவர்கள் வெகு சிலரே என்றும் அவர் கூறினார்.

 

பாஸ்சின் கீழ் இஸ்லாமிய ஆட்சிமுறை இருந்தால்…

 

இஸ்லாமிய ஆட்சிமுறையை அமைக்க பாஸ் அனுமதிக்கப்பட்டால், 1எம்டிபி மற்றும் அது போன்ற ஊழல்கள் இருக்காது ஏனென்றால் பாஸ் கட்சியினர் பாவம் மற்றும் நல்லது ஆகியவற்றைக் கொண்ட இஸ்லாத்தை பின்பற்றுகிறவர்கள் என்று ஹாடி தெரிவித்தார்.

இது பிராத்தனை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அதில் பொருளாதாரமும் அரசியலும் அடங்கும். ஆனால், இந்தக் கூட்டத்தினரைப் (அம்னோ) பொறுத்தவரையில் நல்லதும் கெட்டதும் பிராத்தனையோடும் நோன்போடும் முடிந்து விடுகிறது என்றாரவர்.

அவர்களுக்கு பொருளாதாரத்திலும் அரசியலிலும் பாவம் புண்ணியம் என்ற ஏதும் கிடையாது. ஏராளமான பணத்தை விழுங்கி விட்டு மெக்காவுக்கு உம்ரா மேற்கொள்கின்றனர். அது அவ்வளவு சுலபமானது என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்று ஹாடி அவாங் மேலும் கூறினார்.

திரங்கானு, டுங்குனில் உரையாற்றிய அப்துல் ஹாடி அவாங் தொழிலியர்கள் இப்போது பாஸ் கட்சியிலிருந்து விலகிச் சென்று விட்டனர் என்று சில தரப்பினர் கூறிக்கொள்வதை மறுத்தார்.