ஜமால்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பெட்டாலிங் தெருவில் கலகம்

Jamalbyfridayorriot1பெட்டாலிங் தெருவில் போலியான பொருள்கள் விற்பனை செய்தலுக்கும் மற்றும் அந்நிய வியாபாரிகளுக்கும் எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், கோலாலம்பூரில் சுற்றுப்பயணிகளை அதிகமாகக் கவரும் அத்தெருவில் கலகம் வெடிக்கும் என்று சுங்கை பெசார் அம்னோ தலைவரான ஜமால் முகமட் யுனூஸ் கூறுகிறார்.

அவர் இந்த எச்சரிக்கையை இன்று அம்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு வெளியில் விடுத்தார்.

“வெள்ளிக்கிழமைக்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், சனிக்கிழமையன்று ஒரு பேரணி நடக்கும் என்பதோடு ஒரு கலகமும் ஏற்படலாம் என்று நான் 99 விழுக்காடு உறுதியாக நம்புகிறேன்’, என்று ஜமால் கூறினார்.

அன்று கலகம் செய்தவர்களுக்கும் அமைச்சுக்கும் இடையில் தாம் இடைத்தரகர் என்றும் அவர்களின் கோரிக்கையை அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டதாகவும், இனி எல்லாம் அதிகாரிகளைப் பொறுத்தது என்றும் அவர் கூறினார்.

வெள்ளிக்கிழமைக்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஏதேனும் நடந்தால், அதற்குத் தாம் பொறுப்பல்ல என்று ஜமால் செய்தியாளர்களிடம் கூறினார்.

 

சுமார் 5,000 பேர் திரள்வர்

 

கேள்விக்கு பதில் அளித்த ஜமால், சுமார் 5,000 பேர் பெட்டாலிங் தெருவில் கூடுவர் என்றார். ஆனால், அவர்களின் அடையாளம் குறித்து எதுவும் கூறாமல் மௌனம் சாதித்தார்.

Jamalbyfridayorriot2பெட்டாலிங் தெருவில் காத்திருந்து அவர்கள் யார் என்பதைக் கண்டுகொள்ளுங்கள் என்று கூறிய ஜமால், இன்னொரு சுற்று பேச்சுவார்த்தை நாளை நடைபெறும் என்றார்.

வணிகர்களின் மன்றம் ஒத்துழைப்பு தரும் என்றும் அதன் வழி இன்னொரு செப்டெம்பர் 16 ஐ தவிர்க்க முடியும் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.

“பெட்டாலிங் தெரு போலீயான பொருள்களை விற்கிறது. மியான்மாரர்கள், வங்காளதேசிகள் மற்றும் நேப்பாளிகள் அங்கு வியாபாரம் செய்கின்றனர்.

“அங்கு வியாபாரத்தை இதர இனங்களுடன் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். சீனர்களின் முழு ஆதிக்கமாக இருக்கக்கூடாது”, என்றார் ஜமால்.