பேரணி ஏற்பாட்டாளர்கள்மீது முரண்பாடான தீர்ப்பு: குழப்பத்தில் வழக்குரைஞர்கள்

courtநேற்று  முறையீட்டு  நீதிமன்றம்  ஆர்.யுனேஸ்வரனுக்கு  எதிராக  வழங்கிய  தீர்ப்பில்,  505 பேரணி  ஏற்பாட்டாளரான  அவருக்கு  அபராதம் விதிக்கப்பட்டது  சட்டப்படி சரியானதே  என்று  குறிப்பிட்டதை  அடுத்து  பெரிய  கேள்விக்குறி  ஒன்று  எழுந்துள்ளாது.

ஒரே  நீதிமன்றம் ஒரே  மாதிரியான  வழக்குகளில்  முரண்படும் தீர்ப்புகளை வழங்கியிருப்பது  இனி  வரும்  அதேபோன்ற  வழக்குகளில்  தீர்ப்பு  எப்படி  அமையுமோ  என்று  குழம்ப  வைத்துள்ளாது.

“ஒரே  நீதிமன்றம் ஒரே  மாதிரியான வழக்கில்  முரண்பாடான  தீர்ப்புகளை  வழங்குவது  இதுவே  முதல்  தடவையாக  இருக்கக்கூடும்”,  என  வழக்குரைஞர்  நியு  சின்  இயு  மலேசியாகினியிடம்  கூறினார்.

“முறையீட்டு  நீதிமன்றம், ஏற்கனவே  ஒரு  தீர்ப்பு  வழங்கியிருந்தால்  அந்தத்  தீர்ப்புக்குக்  கட்டுப்பட்டு  நடக்க  வேண்டும்  என்பது  ஒரு  பொதுவான  விதி.  ஆனால்,  முன்பு  நிக் நஸ்மி  நிக்  அஹ்மட்டின்  வழக்கில் வழங்கிய  தீர்ப்பிலிருந்து  முறையீட்டு  நீதிமன்றம்  விலகிச்  சென்றிருப்பது  வியப்பளிக்கிறது”, என்றாரவர்.

யுனேஸ்வரனின்  வழக்குரைஞரான  சிவராசா  ராசையா,  நிக்  அஹ்மட்  வழக்கில்  தீர்ப்பளிக்கப்பட்டு ஒரு  முன்மாதிரி  ஏற்படுத்தப்பட்டிருப்பதை  மாற்றுவதாக  இருந்தால்  அதற்கான  அதிகாரம்  கூட்டரசு  நீதிமன்றத்துக்கு  மட்டுமே  உண்டு  என்றார்.

நேற்று  முறையீட்டு  நீதிமன்றம்  அளித்தத்  தீர்ப்பில்,  முறையீட்டு  நீதிமன்றத்  தலைவர்  நீதிபதி  முகம்மட்  ரவுஸ்  ஷரிப்  பேரணி  நடத்துவது  பற்றி  10  நாள்களுக்குள்  தெரியப்படுத்தாவிட்டால்  அதைக்  குற்றமாக்கும்  அமைதிப்  பேரணிச்  சட்டம்(பிஏஏ)  பகுதி 9(5)  சட்டப்படி  சரியானதே  என்றார்.

இந்தத்  தீர்ப்பு  எழுத்துப்பூர்வமாக  வந்தால்தான்  இதைப்  பற்றி  மேலும்  விவரமாக  ஆராய  முடியும்  என  நியு  தெரிவித்தார்.

நேற்றைய  தீர்ப்பைத்  தொடர்ந்து  யுனேஸ்வரனுக்கு  ஏற்கனவே  விதிக்கப்பட்டிருந்த  ரிம6,000 அபராதம்  நிலைநிறுத்தப்பட்டது. அந்த  பிகேஆர்  நிர்வாக  செயலாளரும்   அபராதத்தைச்  செலுத்தினார்.

இந்தத்  தீர்ப்பு  கடந்த  ஆண்டு  நிக்  நஸ்மி  வழக்கில்  அளிக்கப்பட்ட  தீர்ப்புடன்  முரண்படுகிறது.

அப்போது  வழங்கப்பட்ட  தீர்ப்பில், பேரணி  நடத்துவதற்கு  10 நாள்களுக்குமுன்  அது  பற்றித் தெரியப்படுத்தாவிட்டால்  அது  குற்றமாகும்  என்று  கூறும்  பிஏஏ  பகுதி 9(5)  ‘அரசமைப்புக்கு  விரோதமானது’  என்று  நீதிபதிகள்  குழு, கூறியிருந்தது.

10 நாள்களுக்கு  முன்னதாக  பேரணி  பற்றித்  தெரியப்படுத்தாது  போனால் ரிம10,000  அபராதம்  விதிப்பது  செல்லத்தக்கதல்ல  என்று  கூறி  முறையீட்டு  நீதிமன்ற  நீதிபதிகள்  நிக்  நஸ்மி-க்கு  எதிரான  வழக்கைத்  தள்ளுபடி  செய்தனர்.