முகைதினின் கட்சிப் பொறுப்புகள் குறைக்கப்படுகின்றன

stripஅம்னோ  துணைத்  தலைவரான  முகைதின்  யாசினின்  கட்சிப்  பொறுப்புகள்  படிப்படியாகக்  குறைக்கப்பட்டு  வருகின்றன.

முகைதினைத்  துணைப்  பிரதமர்  பதவியிலிருந்து  வெளியேற்றிய  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் அவரைக்  கட்சித்  துணைத்  தலைவர்  பதவியிலிருந்தும்  தூக்கியிருக்கலாம். அது  அம்னோவில்  மேலும்  நெருக்கடியை உருவாக்கும்  என்பதால்  அவர்  அவ்வாறு  செய்யவில்லை. ஆனால்,  அதற்குப்  பதிலாக  முகைதினை  ஓரங்  கட்டும்  முயற்சிகள்  நடப்பதாக  சில  செய்திகள்  கூறுகின்றன.

அம்னோ  தலைமைச்  செயலாளர்  நேற்று  வெளியிட்டிருந்த  கடிதம்  ஒன்று  இச்  செய்திகளுக்கு  வலுச்  சேர்க்கிறது. பொதுத்  தேர்தல்  ஒருங்கிணைப்பு  மற்றும்  நடவடிக்கை  மையத்தின் (ஜிசிஓசி) கூட்டம்  பற்றிய  கடிதம்  அது.

வழக்கமாக  ஜிசிஓசி  கூட்டம்  அம்னோ  துணைத்  தலைவர்  முகைதின்  தலைமையில்தான்  நடக்கும்.

ஆனால்,  ஞாயிற்றுக்கிழமை  நடைபெறவுள்ள  அக்கூட்டத்துக்குத் துணைப்  பிரதமரும்  அம்னோ  உதவித்  தலைவருமான  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  தலைமை  தாங்குவார்  என்று  கடிதத்தில்  குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைக்  கண்டு  அம்னோ  வட்டாரங்கள்  சில  வியப்படைந்துள்ளன.

அம்னோ  துணைத்  தலைவர்  இருக்கும்போது  உதவித்  தலைவர்  எப்படி  அக்கூட்டத்துக்குத்  தலைமை  தாங்கலாம்  என்றவர்கள்  வினவினார்கள்.

இன்னொரு  கூட்டத்துக்கும்  முகைதின்தான்  தலைமை  தாங்குவார். அந்தப்  பொறுப்பும்  இப்போது  பறிபோயிருக்கிறது.

“வழக்கமாக,  அம்னோ  உச்சமன்றக்  கூட்டத்துக்கு  முன்  நிர்வாகக்  குழுக்  கூட்டமொன்று  நடக்கும். அதற்கும்  அம்னோ  துணைத்  தலைவர்தான்  தலைமை தாங்குவார்”, என  ஒரு  வட்டாரம்  தெரிவித்தது.

ஆனால்,  இப்போது  அதிலும்  ஒரு  மாற்றம்.  அம்னோ  உச்சமன்றத்துக்கு  முந்திய  அக்கூட்டம்  இப்போது  “சிறப்பு  அரசியல்  பிரிவுக்  கூட்டம்”  என்று  அழைக்கப்படுகிறது. நஜிப்பே  அதற்குத்  தலைமை  தாங்குகிறார்.

நஜிப்புக்கு  முகைதின்மீது  நம்பிக்கை  இல்லாமல்  போய்விட்டது  என்றும்  அவரிடமிருந்து  முக்கிய  பொறுப்புகள்  ஒவ்வொன்றாகப்  பறிக்கப்பட்டு  அவர்  ஓரங்கட்டப்படுவதாகவும்  அவ்வட்டாரம்  கூறிற்று.