மனித உரிமைகள் மீதான தாக்கம் குறித்த மதிப்பீடு ஆய்வு (எச்ஆர்ஐஎ) மேற்கொள்ளப்படாமல் டிரான்ஸ்-பசிபிக் பார்ட்னர்சிப் ஒப்பந்தம் (டிபிபிஎ) செய்துகொள்வது மலேசியர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கான ஒரு தெளிவான முயற்சியாகும்
முதலாவதாக, எச்ஆர்ஐஎ ஆய்வு ஒன்றை மேற்கொள்ளாமல் இந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருக்கும் மலேசிய தரப்பினர் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான உரிமையைப் பெற்றிருக்கவில்லை என்று பார்டி சோசலிஸ் மலேசியாவின் தலைமைச் செயலாளர் எ. சிவராஜன் இன்று கூறினார்.
இந்த எச்ஆர்ஐஎ ஆய்வின் நோக்கம் என்ன என்பதை விளக்கிய சிவராஜன், இந்த வாணிப ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டு அமலாக்கம் செய்யப்படும் போது அது மலேசிய மக்களின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்து தெரிந்துகொள்வதாகும் என்றார்.
எச்ஆர்ஐஎ புதிதல்ல
எச்ஆர்ஐஎ ஆய்வு மேற்கொள்ளப்படுவது ஒன்றும் புதிதல்ல. இதர நாடுகள் இதற்கு முன்னர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளன என்பதைச் சுட்டிக் காட்டிய அவர் தாய்லாந்தை ஓர் எடுத்துக்காட்டாக கூறினார்.
மலேசியா இந்த ஆய்வை மேற்கொள்வது மிக முக்கியமாகும். அதனைச் செய்யாவிட்டால், அவர்கள் பெரும் தீங்கிழைக்கும் பணித்திட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர் என்றாரவர்.
“அவ்வாறு செய்வது முதலில் வீட்டுப்பாடத்தைச் செய்யாமல் சோதனைக்குப் போவது போன்றதாகும்”, என்று சிவராஜன் இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
டிபிபிஎ ஒப்பந்தத்தின் இறுதிச் சுற்று பேச்சுவார்த்தை தற்போது அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த வாணிப ஒப்பந்தத்தால் ஏற்படக்கூடிய தாக்கத்தை சுட்டிக் காட்டிய சிவராஜன், உணவு, சுகாதார நலன்கள், அடிப்படைத் தேவைகள், கல்வி, வீடு, தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட உரிமைகள் மற்றும் பூரிவீக மக்களின் உரிமைகளும் அவற்றில் அடங்கும் என்றார்.
அரசாங்கம் மேற்கூறப்பட்டவை மீது போதுமான ஆய்வை மேற்கொள்ளவில்லை என்று அவர் தமது ஆதங்கத்தைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற விவாதம் வேண்டும்
அரசாங்கம் அதன் விருப்பப்படி இந்த வாணிக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தடுப்பதற்காக என்ன செய்யப்பட வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளித்த சிவராஜன், எந்த வாணிப ஒப்பந்தமும் செய்துகொள்வதற்கான முடிவை எடுக்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு உண்டு என்றார்.
ஆனால், சிவில் சமூகத்தின் அழுத்தம் காரணமாக டிபிபிஎ ஒப்பந்தம் மட்டுமே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது என்றாரவர்.
இதற்கு முன்பு ஏராளமான சுயேட்சை வாணிப ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்த அழுத்தத்தின் விளைவாக டிபிபிஎ ஒப்பந்தம் நாடாளுமன்றத்திற்கு செல்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஒப்பந்ததை முழுமையாக விவாதிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த சிவராஜன், விவாதம் நள்ளிரவுக்குப் பின்னர் நடத்துவது போன்ற முறைகளைப் பின்பற்றக்கூடாது என்றார்.
“நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்தை முறையாக விவாதிக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதைச் செய்வதற்கு சரியான தகவல் பெற்றிருக்க வேண்டும்.
“அரசாங்கம் நேர்மையான நோக்கத்தை கொண்டிருந்தால், அது ஒரு முழுமையான எச்ஆர்ஐஎ மேற்கொண்டு அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை முறையாக விவாதிக்க வேண்டும்”, என்றார் சிவராஜன்.
பிஎஸ்எம் இந்த விவகாரம் குறித்து அதன் அறிக்கை ஒன்றை இம்மாத முடிவிற்குள் நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்கும் என்று சிவராஜன் மேலும் கூறினார்.
























