அக்டோபர் மாத இறுதியில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தின்போது முதல் இரண்டு நாள்களை ஆட்சியாளர்கள் மன்றம் நேற்று வெளியிட்ட அறிக்கையை விவாதிக்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“அது (அறிக்கை) நற்சிந்தனையும் நாட்டுப்பற்றும் கொண்ட மலேசியர்கள் கவலை கொண்டுள்ள மூன்று விசயங்களைச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. அவையாவன: ரிம50 பில்லியன் 1எம்டிபி ஊழல், சட்ட ஆளுமை அபாயகரமான நிலையில் இருப்பது, தேச ஒற்றுமை எந்த நேரத்திலும் உடைந்து போகும் நிலையில் இருப்பது”, என லிம் ஓர் அறிக்கையில் கூறினார்.
சட்ட ஆளுமை குறித்து ஆட்சியாளர்கள் கவலை கொண்டிருப்பது “நியாயமானதே”, என்றாரவர்.
முன்னாள் அம்னோ தலைவர் கைருடின் அபு ஹசான் பாதுகாப்புக் குற்றச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதும் சட்டப் பேராசிரியர் அஸ்மி ஷரோம்-மீது தேசிய நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதும் “தீய நோக்கத்துடனும் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையிலும் வழக்கு தொடுக்கப்படுவதற்கும் விசாரணை செய்யப்படுவதற்கும்” ஆன இரண்டு எடுத்துக்காட்டுகளாகும் என்றாரவர்.
“ஊழல், சட்ட ஆளுமை அபாயகரமான நிலையில் இருப்பது, தேச ஒற்றுமை எந்த நேரத்திலும் உடைந்து போகும் நிலையில் இருப்பது”.
இதெல்லாம் சிகப்புச் சட்டைக்காரர்களுக்கும், அவர்களுக்கு வழி விட்ட அரசியல்வாதிகளுக்கும், போலீஸ்காரர்களுக்கும், இதர அரசாங்க அங்கங்களுக்கும் நேரிடையாகவே சொல்லலாமே. மலாய் ஆட்சியாளர்களின் வெற்று அறிக்கை எப்படி இந்நாட்டின் நிலைத்தன்மைக்கும், மேம்பாட்டிற்கும் உதவும்? நமக்கு வேண்டியது செயல் நடவடிக்கை. அறிக்கைகள் அல்ல. அறிக்கைகளைக் கேட்டு கேட்டு காது வலிக்குது. நாளை பிரதமர் கூட்டத்திற்கு வரும்பொழுது அவரிடமே நேரில் கேட்டுப் பதில் சொல்லுங்கள். மக்கள் பிரச்னையை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்க விரும்பவில்லை. பிரச்னைக்கு வழி காணுங்கள் என்றுதான் கேட்கின்றோம். மேலே உள்ளவர்களுக்கு காதில் விழுகின்றதா?