குவான் எங்: மக்களிடமிருந்து ரிம26ஐ எடுத்துக்கொண்டு ரிம1ஐ திருப்பித்தரும் பட்ஜெட் 2016!

 

 அரசாங்கம் நெருக்கடிலிருந்து தப்பித்துகொள்வதற்கு வாணிபத்துறை மீது வரி விதிக்காமல் மக்கள் மீது வரி விதித்துள்ளதை பட்ஜெட் 2016 ஒப்புக்கொள்கிறது.

அரசாங்கம் திவாலாவதிலிருந்தும் அரசாங்க ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் போவதிலிருந்தும் பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) அரசாங்கத்தைக் காப்பாற்றியிருப்பதை பட்ஜெட் 2016 ஒப்புக்கொள்வதை ஊடகங்கள் பரவலாக வெளியிட்டிருக்கின்றன என்று டிஎபியின் தலைமைச் செயலாளர் குவாங் எங் சுட்டிக் காட்டினார்.

அடுத்த ஆண்டில் அரசாங்கம் எதிர்பார்க்கும் ரிம39 பில்லியன் ஜிஎஸ்டி வழி வசூலிக்கப்படும். அது விற்பனை மற்றும் சேவைகள் வரி (எஸ்எஸ்டி) அகற்றப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை சரிகட்டிய பின்னர் கிடைக்கும் ரிம21 பில்லியன் நிகர வருமானமாகும்.

“30 மில்லியன் மலேசியர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட இந்த ரிம21 பில்லியன்தான் அரசாங்கத்தைக் காப்பாற்றியதே தவிர பெட்ரோலியம் மற்றும் டோல் சாவடி நிறுவனங்களிலுள்ள பணக்கார அல்லக்கை நிறுவனங்கள் அல்ல”, என்று பெந்தோங்கில் இன்று நடைபெற்ற பகாங் மாநில டிஎபி கூட்டத்தில் அவர் கூறினார்.

“எடுத்துக் கொண்டது ரிம26, திருப்பித் தருவதுரிம1”

வரியினால் ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் வரி குறைப்பு உதவிகளுக்கு ரிம764 மில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கையில் இந்த பட்ஜெட் 2016 எப்படி மக்களுக்கு உதவப் போகிறது என்று லிம் வினவினார்.

“மக்களிடமிருந்து நேரடியாக ரிம39பில்லியனை அல்லது நிகரமாக ரிம21பில்லியனை வசூலித்த அரசாங்கம் வெறும் ரிம764மில்லியனைத் திருப்பித்தருவது எப்படி மக்களின் சுமையைக் குறைக்கும் பட்ஜெட்டாகும்”, அவர் மேலும் வினவினார்.

“ஜிஎஸ்டி வழி வசூலித்த கூடுதல் நிகர வருமானமான ரிம21பில்லியன் அடிப்படையில், இது பிஎன் [பாரிசான்] மக்களிடமிருந்து ரிம26ஐ எடுத்துக் கொண்டு, ரிம1ஐ மட்டுமே திருப்பித் தருவதாகும்!”, என்று குவான் எங் விளக்கமளித்தார்.