முதலீட்டாளர்கள் பினாங்கிலிருந்து வெளியேற குவான் எங்தான் காரணம்: மசீச குற்றச்சாட்டு

Untitled-1முதலமைச்சர்  லிம்  குவான்  எங்கின்  நிர்வாகம்  சரியில்லை  என்றும்  அதன் விளைவாக  முதலீட்டாளர்கள்  பினாங்கிலிருந்து  வெளியேறுகிறார்கள்  என்றும்  பினாங்கு  மசீச  குற்றஞ்சாட்டியுள்ளது.

அங்குள்ள தொழிற்சாலைகள் மற்ற  இடங்களுக்கு  இடம்பெயர்வதாக மாநில  மசீச  துணைத்  தலைவர்  டான்  தெக்  செங்  கூறினார்.  இதனால்  பினாங்கு  மக்கள்  பாதிக்கப்படுகிறார்கள்.

“கடந்த  வாரம்  பிரபல  அமெரிக்க  நிறுவனம்  ஏஎம்டி  அதன் நடவடிக்கைகளை  முடிவுக்குக்  கொண்டு  வருவதாக  அறிவித்தது”, என்றாரவர்.

ஏஎம்டி  அதன்  தொழிற்சாலையை  சீன  நிறுவனம்  ஒன்றிடம்  விற்கப்  போவதாக  அவர்  சொன்னார்

“ஏஎம்டி  பினாங்கிலிருக்க  விரும்பவில்லை  என்று  தெரிகிறது.

“1972-இல்  பினாங்கில்  அதன்  தொழிற்சாலையை  அமைத்துக்கொண்டு  செயல்பட்டு  வந்த  ஒரு  நிறுவனம்  வெளியேற  காரணம்  என்ன? லிம்  குவான்  எங் விளக்குவாரா?”, என்றவர்  வினவினார்.

பன்னாட்டு  நிறுவனங்கள் பினாங்கு  தொழில் மண்டலத்திலிருந்து  வெளியேறிக்  கொண்டிருப்பதாக  டான்  தெரிவித்தார். வெஸ்டர்ன்  டிஜிட்டல்  கோலாலும்பூருக்கு  இடம்பெயர்கிறது,  எஜ்ஜிஎஸ்டி  டெக்னோலோஜிஸ்  மார்ச்  மாதம்  பினாங்கு  நடவடிக்கைகளை  நிறுத்திக்கொண்டு  ஜோகூருக்குச் செல்கிறது. எம்பினோல்  பாயான்  லெப்பாஸில்  உள்ள  தொழிற்சாலையை  மூடுகிறது. அதன்  சொத்துகளை  சீன  நிறுவனம்  ஒன்றுக்கு  மாற்றி  விடுகிறது.

வெளிநாட்டு  முதலீட்டாளர்கள்  பினாங்கை விட்டு  வெளியேறும்  உண்மையை  லிம் ஒப்புக்கொள்வதில்லை  என  டான்  கூறினார்.

“அவருக்கு ஏதாவது  சாக்குபோக்கு  சொல்லி  உண்மையை  மறைக்கத்தான்  தெரியும்”, என்றாரவர்.

துணை  முதல்வர் II பி.இராமசாமி  பினாங்கு  முதலீட்டு  நெருக்கடியை  எதிர்நோக்குவதாகக்  கூறப்படுவதை  மறுத்து  மக்கள்  கலவரம்  அடைய  வேண்டாம்  எனக்  கேட்டுக்கொண்டார்.