குவான் எங்: டிஏபியைக் கீழறுப்பதில் உள்துறை அமைச்சரும் ஆர்ஓஎஸ்-ஸும் தீவிரம்

cmடிஏபி  1எம்டிபி ஊழலைத்  தொடர்ந்து  எதிர்த்து  வருவதாலும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  கணக்குக்கு  மாற்றிவிடப்பட்ட  ரிம2.6பில்லியன்  பற்றி  விடாமல்  கேள்வி  எழுப்பி  வருவதாலும் உள்துறை  அமைச்சர்  அக்கட்சியைப்  பழிவாங்கும்  முயற்சியில் இறங்கியிருப்பதாகக்  குறைகூறுகிறார்  டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்.

சங்கப்  பதிவகம்  எத்தனை  தடவை  வேண்டுமானாலும்  கட்சியை  விசாரிக்கட்டும்  ஆனால்,  அது  டிஏபி-யைப்  பழி  வாங்கும்  நடவடிக்கையாக  மாறிவிடக்கூடாது  என  லிம்  குறிப்பிட்டார்.

“1எம்டிபி,  நஜிப்பின் கணக்கில்  போடப்பட்ட  ரிம2.6 பில்லியன்  நன்கொடை  ஆகியவற்றின்மீது  எங்களின்  நிலைப்பாட்டுக்காக ஆர்ஓஎஸ்  எங்களைப் பழி  வாங்க முயலாது  என  நம்புகிறோம்.

“பட்ஜெட்  2016-இல்  திட்டங்களுக்காக எந்த  ஒதுக்கீடும்  செய்யாமல்  எங்களைப் பழி  வாங்கி  இருக்கிறார்கள்.

“எங்களைத்  தனியே  ஒதுக்கி,  ஓரங்கட்டி  விட்டார்கள். பினாங்கு  மலேசியாவின்  ஒரு  பகுதி  அல்ல  என்பதுபோல்  நடந்து  கொண்டிருக்கிறார்கள். நீதியின்  அடிப்படையில்  அல்லாமல்  அரசியலின்  அடிப்படையில்  அமைந்த  எங்களுக்கு  எதிரான  இப்போக்கு  தொடர்ந்து கொண்டிருக்கிறது”, என  பினாங்கின்  முதல்வருமான  லிம்  கூறினார்.

டிஏபிமீது  ஆர்ஓஎஸ்  விசாரணை  இன்னும்  முடிவுறவில்லை  என்று  துணைப்  பிரதமரும்  உள்துறை  அமைச்சருமான  அஹமட்  ஜாஹிட்  ஹமிடி  கூறியது  பற்றி லிம்  கருத்துரைத்தார்.