‘பாஸ் பிஎன்னுடன் ஒத்துழைக்கும் என்று கூறியதை நஸ்ரி தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்’

coopஅம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்   பாஸ் பிஎன்னுடன் ஒத்துழைக்கத்  தயார்  என்று கூறியதைத்  தவறாக அர்த்தம்  செய்து  கொண்டிருப்பதாக  பாஸ் தலைமைச்  செயலாளர்  தகியுடின் ஹசான்  கூறினார்.

இன்று  நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  பேசிய  தகியுடின்,  ஒத்துழைப்பு  என்றால்  அரசியல்  ஒத்துழைப்பு  அல்ல  என்றார்.

“அவர் (நஸ்ரி) தவறாக  புரிந்து  கொண்டிருக்கிறார். பாஸ்  அரசியல்  ஒத்துழைப்பையோ  தேர்தல்களில்  ஒத்துழைப்பதையோ விரும்பவில்லை. விவகாரங்களின்  அடிப்படையில்  ஒத்துழைப்போம்.

“மக்களுக்கு  எதுவும்  நன்மை  தருவதாக  இருந்தால்  அதில்  ஒத்துழைப்போம்”, என்றார்.

நேற்று  நஸ்ரி  அம்னோ- பாஸ்  கூட்டணி  நடக்க  முடியாத  ஒன்று  என்றார். ஏனென்றால்  பொதுத்  தேர்தல்  வந்தால்  இரண்டும்  இடத்துக்கு  அடித்துக்கொள்ளும்  என்றவர்  குறிப்பிட்டார்.

முன்பு  பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்கும்  அம்னோவுடன்  ஒத்துழைக்கத்  தயார்  என்று  கூறியது உண்டு.  அனால்  அவரும்கூட  அரசியல்  ஒத்துழைப்பு  சாத்தியமில்லை  என்றுதான்  சொன்னார்.

அந்த  நிலைப்பாட்டை  மீண்டும்  உறுதிப்படுத்திய  தாகியுடின்  பாஸ்  எப்போதும்  எதிரணிதான்  என்றார். பரஸ்பரம்  நன்மை  அளிக்கும்  விவகாரங்களில்  அது  டிஏபியுடன்கூட  ஒத்துழைக்கும்  என்றவர்  சொன்னார்.