அம்னோ ஆண்டுக் கூட்டத்துக்கு ஊடகங்களுக்கு அனுமதி இல்லை

agmஊடகங்கள்  அடுத்த  மாத  அம்னோ  ஆண்டுக்  கூட்டத்தில்  செய்தி  சேகரிப்பதற்குக்  கட்டுப்பாடுகள்  விதிக்கப்படும்  எனக்   கட்சித்  தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்  தெரிவித்துள்ளார்.

முதன்முதலாக  இப்படிப்பட்ட  கட்டுப்பாடுகள்  கொண்டுவரப்படுவதாகக்  கூறிய  அவர்,  இணைய  செய்தித்தளங்கள்  செய்திகளைத்  திரித்துக்கூறும்  பழக்கத்தைக்  கொண்டிருப்பதுதான்  இதற்குக்  காரணம்  என்றார்.

“உங்களைப்  போன்ற  இணைய  செய்தித்தளங்கள்தான்  செய்திகளைத்  திரித்துக்  கூறி  விடுகிறீர்களே”, என அவ்விவகாரம்  பற்றி  வினவிய  மலேசியாகினியிடம் தெங்கு  அட்னான்  கூறினார்.

இக்கட்டுப்பாடு  அம்னோ  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  தொடக்கவுரைக்கும்  பொருந்துமா  என்று அவரிடம்  கேட்கப்பட்டதற்கு: “அதை(செய்தி  சேகரிப்பதை)  அனுமதிப்பதா,  வேண்டாமா  என்று   பரிசீலிக்கிறோம். முடிவுரையைப்  பற்றியும்தான்”, என்றார்.

அம்னோ  உதவித்  தலைவர்கள்  அஹ்மட் ஜாஹிட்  ஹமிடியும்  ஹிஷாமுடின்  உசேனும்  ஒவ்வொரு  நாளும்  செய்தியாளர்  கூட்டம்  நடத்துவார்கள்  என்றும்  அவற்றில் ஆண்டுக்  கூட்டத்தின்  நடப்புகள்  பற்றி விளக்கமளிக்கப்படும்  என்றும்  தெங்கு  அட்னான்  தெரிவித்தார்.