அண்மையில் நிறைவேற்றப்பட்ட தேசிய பாதுகாப்பு மன்ற (என்எஸ்சி) சட்டவரைவை வரைந்தவர்கள் அதில் தேசிய பாதுகாப்புக் கொள்கையை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் புறக்கணித்திருப்பதுபோல் தெரிகிறது என அனைத்துச் சமயக் குழு கூறியது.
“அது (என்எஸ்சி) பிரதமருக்கு அதிகாரமளிப்பதற்கு அளவுமீறி முக்கியத்தும் கொடுக்கிறது ஆனால் சட்டவரைவை வரைந்தவர்கள் என்எஸ்சி தேசிய பாதுகாப்புக் கொள்கை ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை முற்றாக மறந்து விட்டார்கள்போல் தோன்றுகிறது.
“தேசிய பாதுகாப்புக் கொள்கைமீது அரசாங்கம் இதுவரை எந்தவோர் ஆவணத்தையும் கொண்டு வந்ததில்லை”, என மலேசிய புத்த சமயம், கிறிஸ்துவம், இந்து சமயம், சீக்கிய சமயம், தாவோயிசம் ஆகியவற்றின் ஆலோசனை மன்றம் (MCCBCHST) ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
“அந்தச் சட்டவரைவை இரத்துச் செய்யாவிட்டால் அதில் திருத்தம் கொண்டுவந்து மற்ற பிஎன் கட்சிகளின் அமைச்சர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முறையான தேசிய பாதுகாப்புக் கொள்கையை உருவாக்கிச் செயல்படுத்த முடியும்”, என்று அது கூறிற்று,
அவ்வறிக்கையில், மதிப்புமிகு ஜிட் ஹெங், ஆர்.எஸ். மோகன் ஷண், ஆயர் செபாஸ்டியன் பிரான்சிஸ், சர்தார் ஜக்பீர் சிங், தாவ்ஷாங் டான் ஹோ சியோ, பிரேமதிலகா ஸ்ரீசேனா ஆகியோர் கையொப்பமிட்டிருந்தனர்.
என்எஸ்சி உறுப்பினர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுப்பது தடுக்கப்பட்டிருப்பதால் அவர்களின் செயல்களுக்கு அவர்களை எந்த வகையிலும் பொறுப்பாக்க முடியாமல் போய்விடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
“நீதிமன்றங்களில் எதிர்த்து வழக்காட அச்சட்டவரைவு இடமளிக்க வேண்டும். அப்போதுதான் தவறு நிகழ்ந்தால் தடுக்க முடியும். ஒரு ஜனநாயகத்தில் இவ்வளவு விரிவான அதிகாரத்தை தங்குதடையின்றி எந்தவொரு அமைப்புக்கும் தூக்கிக் கொடுத்து விட முடியாது”, என்றவர்கள் தெரிவித்தனர்.