என்எப்சி அரசாங்கக் கடனைச் செலுத்தும் பேச்சுகளை இன்னும் தொடங்கவில்லை

nfccதேசிய  பீட்லோட்  கார்ப்பரேசன்(என்எப்சி) அரசாங்கம்  அளித்த  ரிம250 மில்லியன்  எளிய  நிபந்தனை  கடனைத்  திருப்பிச்  செலுத்துவதற்கான   பேச்சுகளை  இன்னும்  தொடங்கவில்லை  என  அதன்  தலைவர்  முகம்மட்  சாலே  இஸ்மாயில்  கோலாலும்பூர் உயர்  நீதிமன்றத்தில்  தெரிவித்தார்.

பாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்லிக்கும்  மலேசியாகினிக்கும்  எதிராக  தாம்  தொடர்ந்துள்ள  அவதூறு  வழக்கில்  மும்முரமாக  இருப்பதுதான்  இதற்குக்  காரணம்  என்றாரவர்.

அவ்வழக்கின்   விசாரணையில்  இன்று  ரபிஸியின்  வழக்குரைஞர்  ரஸ்லான் ஹட்ரி  சுல்கிப்ளி  சாலேயிடம்  நேற்று  விட்ட  இடத்திலிருந்து  குறுக்கு  விசாரணையைத்  தொடர்ந்தார்.

ரஸ்லான்,  சாலேயிடம்  அவருக்கு  அனுப்பப்பட்ட அரசாங்கக் கடனளிப்பு  திரும்பப்  பெறப்படுவதாக  தெரிவிக்கும்  கடிதத்தின்  உள்ளடக்கம்   பற்றி  வினவினார்.

ரஸ்லான்: அக்கடிதத்தில்  என்ன  இருந்தது?

சாலே:  கடன் திரும்பப்  பெறப்பட்டது  என்று  இருந்தது.

ரஸ்லான்: அவ்வளவுதானா? பணத்தைச்  திருப்பிச்  செலுத்த  வேண்டிய  அவசியம்  இல்லையா?

சாலே: வழக்கில் மும்முரமாக இருப்பதால்  அதைப்  பற்றி  இன்னும்  பேச்சு  தொடங்கவில்லை.

ரஸ்லான்: அதாவது  வழக்கில்  மும்முரமாக  இருப்பதால் அதைத்  திருப்பிச்  செலுத்தவில்லை.

சாலே: நாங்கள்  கொடுத்திருக்கிறோம். முன்பே  சொன்னேனே-  இரண்டாண்டுகள்  திருப்பிச்  செலுத்தினோம்  என்று.

ரஸ்லான்: சரி, ஓரளவு  கட்டியிருக்கிறீர்கள். ஆனால், எல்லாம்  கட்டி  முடிக்கவில்லை. இப்படிச்  சொல்லாமா?

சாலே: எப்படிக்  கொடுப்பது? உங்கள்  கட்சிக்காரர்தான் என்  நிறுவனத்தைக்  கவிழ்த்து  விட்டாரே.

-இது  காலையில்  நடந்த  குறுக்கு-விசாரணை. பிற்பகலில்  அது  தொடரும்.