பஸ் கட்டணத்தை உயர்த்த இது சரியான நேரமல்ல- ஃபோம்கா

“சரியான  நேரத்துக்குக்  காத்திராமல்”  பேருந்து  கட்டணத்தை  அதிகரிக்க  அவசரம்  காட்டும்  கொன்சோர்டியம்  ட்ரேன்ஸ்நேசனல்  பெர்ஹாட்டை   மலேசிய  பயனீட்டாளர்  சங்கச்  சம்மேளனம்  கண்டித்துள்ளது.

இவ்வாண்டில்  பல  பொருள்களின் விலைகள்  கூடியிருப்பதால்  மக்கள்,  குறிப்பாக  குறைந்த  வருமானம்  பெறுவோர்  மிகவும்  துன்பப்படுகிறார்கள்  என  ஃபோம்கா  தலைவர்  மாரிமுத்து  நடேசன்   கூறினார்.

“இது சரியான  நேரமல்ல. சரியான  நேரம் வரும்போது  நீங்கள்  கட்டணத்தை  உயர்த்தலாம், பரவாயில்லை.

“இப்போது  எல்லாவற்றின்  விலையும்  உயர்ந்துள்ளது. பயனீட்டாளர்கள்  மிகவும்  அவதியுறுகிறார்கள்”, என  மாரிமுத்து  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

பராமரிப்புச் செலவுகள்  கூடி  இருப்பதால்  பேருந்து  கட்டணம்  உயர்த்தப்பட வேண்டும்  என்று  ட்ரேன்ஸ்நேசனல்  அரசாங்கத்தைக்  கேட்டுக்  கொண்டிருப்பது  பற்றி  அவர்  இவ்வாறு  கருத்துரைத்தார்.