டிஏபி இனவாதக் கட்சி அல்ல, 1969-லேயே அது அம்னோ கோட்டைகளில் போட்டி போட்டிருக்கிறது

notடிஏபி  என்றுமே இன, சமய  வேறுபாடு  பார்த்ததில்லை  என்கிறார்  டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட் சியாங். 1960-களிலிருந்து  அதன்  தேர்தல்  நடவடிக்கைகளே  இதற்குச்  சான்று  பகரும்  என்றாரவர்.

பாஸ்  தலைவர்,  டிஏபி  இஸ்லாத்துக்கு  எதிரி  என்றும்  ஆட்சிக்கு    வந்தால்  மலேசியாவில்  இராணுவத்  தளம்  அமைக்க  இடம்  கொடுப்பதாக இஸ்ரேலுக்கு  அது  வாக்குறுதி  அளித்திருக்கிறது  என்றும்  கூறியிருப்பதற்கு  எதிர்வினையாக  லிம்  இதனைத்  தெரிவித்தார். பாஸின்   கூற்றை  மறுத்த  டிஏபி  அவ்வாறு  கூறியதற்காக  அவருக்கு  எதிராக சட்ட  நடவடிக்கை  எடுப்பது  பற்றி  ஆலோசித்து  வருகிறது.

“டிஏபி  தொடங்கப்பட்டதிலிருந்தே  இன,  சமய,  வட்டார  வேறுபாடின்றி  அனைத்து  மலேசியர்களுக்காகவும்  பாடுபடும்  நோக்கத்தையும்  கடப்பாட்டையும்  கொண்டுதான்  செயல்பட்டு  வந்துள்ளது”,  என  நேற்று  மலாக்காவில்  லிம்  கூறினார்.

1969-க்கு  முன்பு  டிஏபி  மூன்று  இடைத்  தேர்தல்களில்  போட்டியிட்டது. போட்டியிட்ட  மூன்று  இடங்களுமே  அம்னோ  கோட்டைகள்- 1969, ஜனவரியில்  கம்பொங்  பாரு, 1967,  செப்டம்பரில்  ஜோகூரில்  தாம்போய்,  1968,  அக்டோபரில்  செகாமாட்  உத்தாரா  நாடாளுமன்றத்  தொகுதி.

எல்லா  மலேசியர்களுக்காகவும்  போராடும்  பண்புதான்  1969-இல்  மூவாயிரம்  உறுப்பினர்களை  மட்டுமே  கொண்டிருந்த  டிஏபி-க்கு  300,000  வாக்குகளைப்  பெற்றுத்  தந்தது  என்றாரவர்.