இந்திரா தமது மகளுடன் மீண்டும் ஒன்று சேர்தலை நஜிப் 48 மணி நேரத்திற்குள் உறுதி செய்ய வேண்டும், கிட் சியாங்

threatதாய் இந்திரா காந்தியின் ஒப்புதல் இன்றி அவரது மூன்று குழந்தைகளை அவரது முன்னாள் கணவர் இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்யப்பட்டது சம்பந்தமான வழக்கை நஜிப் தலைமைத்துவத்தின் மாபெரும் அநீதிகளில் ஒன்று என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் வர்ணித்தார்.

இன்று கூடும் அமைச்சரவை 48 மணி நேரத்திற்குள் இந்திரா அவரது மகளுடன் மீண்டும் ஒன்று சேர்வதை பிரதமரும் அவரது அமைச்சரவையும் உறுதி செய்ய வேண்டும் என்று கிட் சியாங் நேற்று சவால் விட்டார்.

“பிரதமர், அமைச்சரவை, நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகிய அனைத்தும் இந்திராவை கைவிட்டு விட்டன. அரசமைப்புச் சட்டம், சட்டங்கள், நீதிமன்றங்கள் மற்றும் ஆட்சி indiraஅமைவுமுறை ஆகியவை கையாளப்பட்டு தாய் என்ற முறையில் தனது குழந்தையைக் காண்பதற்கும், அணைப்பதற்கும், தொடுவதற்கும் இந்திராவுக்குரிய அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.

“ஏப்ரல் 2009 இல், மலேசியாவின் ஆறாவது பிரதமராக நஜிப் பதவி ஏற்ற அதே வாரத்தில், இந்திராவின் மூன்று குழந்தைகளையும் அவரது ஒப்புதல் இன்றி முன்னதாகவே இஸ்லாத்திற்கு மதம் மாறிவிட்ட அவரது முன்னாள் கணவர் இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்தார்.

“அதிலிருந்து தொடங்கியதுதான் அவருடைய மூன்று குழந்தைகளைக் கட்டுப்படுத்தவும், பராமரிக்கவும் கோரும் இந்திராவின் நீண்ட, இன்னும் முற்றுப் பெறாத சட்டப் போராட்டம்”, என்று லிம் கிட் சியாங் அவரது அறிக்கையில் கூறுகிறார்.