வழக்குரைஞர்கள்: நீதிபதிகள் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்

paulநீதிபதிகள் தங்களின்   தீர்ப்புகள்  மக்கள்  மன்றத்தில்  அலசி  ஆராயப்படுவதை  ஒரு  குறையாக  நினைக்கக்கூடாது,  அதை  வழக்கமான  ஒன்றாக  ஏற்றுக்கொள்ள  வேண்டும்  என்று  சுதந்திரத்துக்கான  வழக்குரைஞர்கள்(எல்எப்எல்)  என்னும்  என்ஜிஓ  கூறியுள்ளது.

மக்கள்  நீதித்துறையைக்  குறை  சொல்வதாகவும்  அவர்கள்  குறை  சொல்வதற்குமுன் தீர்ப்புகளை  நன்கு  படித்துப்  பார்க்க  வேண்டும்  என்றும்  தலைமை  நீதிபதி  அரிபின்  ஜக்கரியா  கடந்த  வெள்ளிக்கிழமை  முறையிட்டிருப்பதற்கு   எதிர்வினையாக  எல்எப்எல்  செயல்முறை  இயக்குனர்  எரிக்  பால்சன்  இவ்வாறு  கூறினார்.

“நீதித்துறை,  மக்கள்  மன்றத்தில்  விசாரணைக்கு  உள்ளாகும்  இந்த  யதார்ந்த  நிலைக்குத்  தன்னை  வழக்கப்படுத்திக்  கொள்ள   வேண்டியதுதான்”, என  பால்சன்  குறிப்பிட்டார்.

கூடுதல்  வெளிப்படைத்தன்மை,  பொறுப்புடைமை  தேவை  என்ற  கோரிக்கைகள்  பெருகி  வரும்  இக்காலத்தில்  நீதியினதும்  அரசமைப்பினதும்  காவலன்  என்பதால்  நீதித்துறையின்  போக்கும்  அதன்  தீர்ப்புகளும்  அணுக்கமான  கவனிப்பிலிருந்து  தப்பிவிட  முடியாது  என்றாரவர்.