புத்ரா ஜெயாவுக்கும் பகாங்குக்குமிடையிலான மோதலே பாக்சைட் விவகாரம்

chungபாக்சைட்  விவகாரத்தில்  கூட்டரசு  அரசாங்கமும்  குவாந்தானும்  மோதிக்  கொண்டிருப்பதாகக்  கூறுகிறார்  சுற்றுச்  சூழல்  கொள்கை  ஆய்வாளர்  சுங்  ஈய் பான்.

ஊடகங்கள்  குறிப்பாக,  அம்னோவுக்குச்  சொந்தமான த  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  போன்றவை  பகாங்  அரசுதான்  அந்த  விவகாரத்துக்கு  முழுக்  காரணம்  என்பதுபோல  செய்திகளை  வெளியிட்டு  வருகின்றன.

ஆனால், அது  முழு  உண்மை  அல்ல,  கூட்டரசு  அரசாங்கம்  நினைத்தால்  அதை  நிறுத்த  முடியும்  என்றாரவர்.  சுங், நேற்றிரவு,  கோலாலும்பூர்- சிலாங்கூர்  சீன  அசெம்ப்ளி  மண்டபத்தில்  பாக்சைட்  நெருக்கடி மீதான  கருத்தரங்கில்  கலந்துகொண்டு  பேசினார்.

“கூட்டரசு  துறைகளிடம்தான்  அதிகாரம்  உள்ளது. அவற்றின்  உதவியில்லாமல்  பாக்சைட்  சுரங்க  நடவடிக்கைகள்  இவ்வளவு சீராக  நடைபெற  இயலாது”.
கனிமங்கள்  தோண்டி  எடுப்பது  வேண்டுமானால்  மாநில  அரசின்  அதிகாரத்துக்கு  உள்பட்டதாக  இருக்கலாம். ஆனால், அதை  வெளிநாடுகளுக்கு  ஏற்றுமதி  செய்ய  இயற்கைவள, சுற்றுச்சூழல்  அமைச்சுத்தான்  உரிமம்  அளிக்க  வேண்டும்.

“கூட்டரசு  அரசாங்கத்தின்  அனுமதியின்றி  எந்தக்  கப்பலும்  பாக்சைட்டை  நாட்டைவிட்டுக்  கொண்டு  செல்ல  முடியாது”, என்றாரவர்.

அமைச்சைத்  தவிர்த்து  அரசு  சுங்க, கலால்  துறை,  எம்ஏசிசி,  குவாந்தான்  துறைமுக  நிர்வாகம்,  சுகாதார  அமைச்சு,  சாலைப்  போக்குவரத்துத்  துறை,  நிலப்  போக்குவரத்து  ஆணையம்,   பொதுப்  பணித்  துறை  ஆகியவற்றுக்கும்கூட  இதில்  பொறுப்புண்டு  என்று  அவர்  கூறினார்.