மலேசியாவில் ஒரு நாளைக்கு ஒரு நேப்பாளி இறக்கிறாராம்

nepalமலேசியாவில்  ஒவ்வொரு  வாரமும்  ஒன்பது  நேப்பாளிகள்  உயிரிழப்பதாக  அதிர்ச்சிதரும்  செய்தியை  கோலாலும்பூரில்  நேப்பாள  தூதரகம்  கடந்த  ஆண்டு இறுதியில்  வெளியிட்டிருந்தது.

வேலை  செல்லும்  இவர்கள்  பத்திரமாக  திரும்புவார்களா  என்பதே  சந்தேகமாம்.  வேலையின்போதே  இறப்பதே   இவர்களின்  வாழ்க்கையாகி  விட்டதாம்.

கடந்த  12 ஆண்டுகளில்  3,000  நேப்பாளிகள்  மலேசியாவில்  இறந்து  போனதாக  தூதரகம்  தெரிவித்தது.  கடந்த  ஆண்டில்  ஜூலைக்கும்  நவம்பருக்குமிடைப்பட்ட  ஐந்து  மாதங்களில்  166  பேர்  இறந்தார்கள்.

அக்காலக்கட்டத்தில்  மட்டும்  நேப்பாள  நாட்டுத்  தொழிலாளரிடையே  வாரத்துக்கு  ஒன்பது  இறப்புகள்  நிகழ்ந்தன  எனத்  தூதரகம்  கூறியது.

பெரும்பாலும்  திடீர்  மரணம்தான்.

“சில  மாதங்களுக்கு  முன்பு  சக  நேப்பாள  தொழிலாளர்  ஒருவர்  வேலைக்கு  நடந்து  செல்லும்போதே  பொத்தென்று  கீழே  விழுந்து  இறந்தார்”, என டமன்சாராவில்  பாதுகாவலராக  பணி  புரியும்  டிலிப்  மல்லா,43,  கூறினார்.. “பிறகுதான்,  அவருக்கு  மாரடைப்பு  என்று  தெரிந்தது.  ஆனால்  அது  திடீரென்றுதான்  ஏற்பட்டது”.

மலேசியாவில்  மட்டுமல்ல. காட்டார்,  ஐக்கிய  அரபு  சிற்றரசுகள்(யுஏஇ)  ஆகியவற்றிலும்  மற்ற  குடா  நாடுகளிலும்  ஒப்பந்தத்  தொழிலாளர்களாக   பணி  புரியும்  நேப்பாளிகளிடையேயும்  இந்நிலை  காணப்படுவது  மருத்துவர்களுக்கும்  தொழிலாளர்  நல  ஆர்வலர்களுக்கும்  புரியாத  புதிராக  இருக்கிறது.