அரசியல் விளையாட்டுகளையும் பழித்துரைப்பதையும் கைவிடுவீர்: எம்பிகளுக்குப் பேரரசர் அறிவுறுத்து

agungஇன்று  நாடாளுமன்றக்  கூட்டத்  தொடரைத்  தொடக்கிவைத்த  மாட்சிமை  தங்கிய  மாமன்னர்   துவாங்கு அப்துல்  ஹாலிம்  முவா’ட்ஸம்  ஷா,   நாடாளுமன்ற  உறுப்பினர்கள்  விபரீத  அரசியல்  விளையாட்டுகளை  நிறுத்திக்கொள்ள  வேண்டும்  என  வலியுறுத்தியதுடன்   இப்போதைய  ஆட்சியே  தொடர  வேண்டும்  என்ற  விருப்பதையும்  வெளியிட்டார். அப்போதுதான்  மலேசியா  உயர்  வருமானம்  கொண்ட  ஒரு  நாடாக  உருவாகும்  இலக்கை  அடைய  முடியும்  என்றாரவர்.

மாறுபட்ட  கருத்துகளுக்கு  மதிப்பளிக்க  வேண்டும்  என்று  குறிப்பிட்ட  பேரரசர்,  அதற்காக  ஒருவரை  மற்றவர்  பழித்துரைப்பதும்  கவிழ்க்க  முனைவதும் கூடாது  என்றார்.

“எல்லா (நாடாளுமன்ற)  உறுப்பினர்களும்  ஒன்றுபட்டிருக்க  வேண்டும். நாட்டின்மீது  பாசம்  கொண்டவர்களாக  இருத்தல்  வேண்டும்  எனக்  கேட்டுக்கொள்கிறேன். பிளவுபடாத  விசுவாசத்துடன்  நாட்டைப்  பாதுகாப்பீர்,  தற்காப்பீர்”, என  மாமன்னர்  கேட்டுக்கொண்டார்.

“நாடாளுமன்ற  ஜனநாயகத்தில்  மாறுபட்ட கருத்துகள்  இருக்கலாம். மாறுபட்ட  கருத்துகளுக்கு  மதிப்பளியுங்கள்.  ஆனால், ஒருவரைக்  கவிழ்ப்பது,  பழித்துரைப்பது,  ஒருவர்மீது  பகையை  வளர்த்துக்கொள்வது  வேண்டாம். அது  நாட்டை  அழிவுக்கு  இட்டுச்  செல்லும்”, என்றவர்  கூறினார்.