செண்டர் பார் பெட்டர் டுமாரொ அல்லது சென்பெட் எனும் ஆய்வுக் குழுவின் ஆய்வின்படி, இனவாதம்கொண்டவர்கள் அல்லது இனவாதத்தின் தாக்கத்தை உணர்ந்தவர்கள் என 40.75 % மலேசிய இளைஞர்கள் ஒத்துக்கொள்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனைச் சுட்டிக் காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன், பெரும்பாலான மலேசியர்கள் இனவாதத்தை ஆதரிக்காவிட்டாலும், அவர்களின் நடைமுறை வாழ்க்கையின் பல கூறுகளை காணும் போது அதில் அவர்களின் இனவாத தன்மை கலந்திருப்பது தெரியவருகிறது என்றார்.
இந்த ஆய்வினை கண்ணுற்ற மலேசியர்கள் அதன் முடிவுகளைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டுமா அல்லது அக்கண்டுப்பிடிப்புக்கள் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனவா? என்று கேட்டால் பெரும்பாலான மலேசியர்கள் இதன் உண்மைகளைக் கண்டு ஆச்சரியப்படமாட்டார்கள் என்பதே தமது கருத்து என்றாரவர்.
பல ஆண்டுகளாக நீடித்து வரும் பாரிசான் அரசாங்கத்தின் ஆட்சியே இந்த கவலைக்குரிய நிலைமைக்கு காரணம் என்று இந்த ஆய்வு காட்டுகிறது. மேலும் இன ஒற்றுமையை பேணிக்காக்க இந்த அரசு தவறிவிட்டது என்பதனையும் இது நிரூபிக்கின்றது என்று குலா மேலும் விவரித்தார்.
அரசியல் தலைவர்கள் அனைத்து மலேசியர்களின் நலத்தினை கருத்தில் கொள்ளாமல் குறிப்பிட்ட ஓர் இனத்தின் நலன் குறித்து பிரச்சாரம் செய்யும் பொழுது அதன் தாக்கத்தை சராசரி மலேசியனால் எப்படி உணராமல் இருக்க முடியும் என்று அவர் வினவினார்.
இன வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்ட மக்களின் மனோநிலை களையப்படாத வரையில், அரசாங்கம் உருவாக்கிய ஒற்றுமைக்கான நீல வியூகம் திட்டத்தின் உண்மையான ஒற்றுமை நோக்கம் ஒரு போதும் வெற்றி அடையாது என்பதை வலியுறுத்திய குலா, இன அடிப்படையிலான அரசியல் கட்சிகளும் திட்டங்களும் இருக்கும் வரையில் நல்ல மனோநிலையை மக்களின்மனதில் ஏற்படுத்துவது சிரமமாகும் என்று மேலும் கூறினார்.
ஆகவே, இதற்கு சரியான வழி, இன வாத அரசியல் கட்சிகளை ஒழிப்பதும், இனபாகுபாடுகள் இல்லாத கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டு வருவதும்தான் என்று அவர் கருத்துரைத்தார்.
சரவா மக்கள் குறைந்த இனவாதம் கொண்டவர்கள் என்று பரவாலான ஒரு நம்பிக்கை உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இனவாத அரசியலை தன் முதன்மை ஆயுதமாகப் பயன் படுத்தும் அம்னோ அந்த மாநிலத்தில் இன்னும் அதன் வேர்களை ஊன்றவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய குலா, சென்பெட் அதன் ஆய்வுகளை சரவாக்கில் நடத்தி இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இனவாதம் அணைத்து கட்சிகளிலும் உள்ளது.மலேசியர்கள் என்ற நிலை அணைத்து கட்சிகளிலும் உருவானால் இனவாதம் உருவாக வாய்பில்லை.