பிரஜைகள் பிரகடனத்திற்கு அமோக ஆதரவு!

segaran kandaமலேசியாவை காப்பாற்ற வேண்டுமானால் முதலில் நஜிப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய 37 கூறுகளைக் கொண்ட பிரஜைகள் பிரகடனத்திற்கு இதுவரையில் 46,000 –க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

நேற்று காலை, பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற ஒரு கையெழுத்திடும் நிகழ்ச்சியில் 26 சமூக இயக்கங்களை சார்ந்தவர்கள் கையெழுத்திட்டு தங்களின் ஆதரவை தெரிவித்தனர். இதில் ஜி25 என்ற முன்னாள் மேல்நிலை அரசாங்க அதிகாரிகள் கொண்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ நூர் பரிடா ஹரிபின், பத்திரிக்கை விமர்சகர் கே ஜே ஜோன், அளிரான் இயக்கத்தின் சராஜுன் ஹொடா போன்றவர்களும் கலந்து கொண்டனர்.

இந்திய இயக்கங்களைச் சார்ந்த குணராஜ், இலா. சேகரன், பா. கந்தசாமி, ஜீவி காத்தையா, கா. உதயசூரியன் ஆகியோரும், அம்பிகா சீனிவாசன், மரியா சின் அப்துல்லா ஆகியோரின் முன்னிலையில் நடந்த இந்த கையெழுத்துடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆதரவு நல்கினர்.

Faridaஇந்தப் பிரகடனத்தின் முக்கிய சாரம் இரண்டாகும்:

முதலாவதாக, 1எம்டிபியின் ஊழல். இது எவ்வாறு உருவானது; அதில் எவ்வளவு பணத்தை முதலீடு செய்தார்கள்; அவை என்ன ஆனது என்பவை விவரிக்கப்பட்டன. இது முழுமையாக நஜிப் தனது பண அரசியலை நடத்தப் பயன் படுத்தப்பட்டது என்றும், அதன் பயனாக ரிம42 பில்லியனை கடனாகப் பெற்று பல திட்டங்களின் வழி பட்டுவாடா செய்த நஜிப் தனது வங்கிக் கணக்கிலும் பணத்தை கையாண்டார் என்பதாகும்.

Thulasi இரண்டாவது, இந்த ஊழல் சார்பாக  கேள்விகள் கேட்கும் எவரையும் அடக்கவும் ஒடுக்கவும் அரசாங்க அமைப்பு முறைகள் பயன்படுத்தப்பட்டதாகும். புலனாய்வுத்துறை, அட்டார்னி ஜெனரல் அலுவலகம், காவல்துறை, இலஞ்ச ஒழிப்பு இலாக்கா, மத்திய வங்கி போன்றவை பிரதமரின் கட்டுப்பாட்டுக்குள் இயங்குவதால், இவற்றை நஜிப் பயன்படுத்திக்கொண்டு நாட்டின் நிலைத்தன்மையை புரையோடச் செய்துள்ளார் என்பதாகும்.

இதற்கு தீர்வாக இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:

kathaiahமுதலாவது, நஜிப் பதவி விலக வேண்டும். இதை அரசமைப்புக்கும், நாட்டின் சட்ட திட்டங்களுக்கும் உட்பட்ட வகையில் நிறைவேற்ற வேண்டுவதாகும்.

இரண்டாவதாக, புரையோடிப்போயிருக்கும் அரசாங்க அமைப்பு முறைகளை மீட்டெடுப்பதாகும். அதோடு அதில் தொடர்ந்து குற்றம் செய்பவர்களைத் தண்டிப்பதாகும்.

மக்கள் மேம்பாடடைய கண்டிப்பாக அரசியல் மாற்றம் தேவை. அரசியல் இயந்திரங்களும் அமைப்பு முறைகளும் அரசமைப்பு சட்டத்திற்கு  உட்பட வேண்டும். அவை பிரமரின் கீழ் இயங்கக்கூடாது. ஒரு முழுமையான தீர்வுக்கு முதல் கட்டம் நஜிப்பின் பதவி விலகல்தான். நஜிப் இருக்கும் வரை பிற மாற்றங்கள் வராது என்கிறார்.

இதில் கலந்து கொண்ட ஓர் இளம் வழக்கறிஞர், துளசி மனோகரன், இதில் கைழுத்திடுவது எங்களை போன்றோரின் கடமை என்றவர், ஊழலைக் கொண்டு மக்களை விலைபேசும் அரசியலால் நாட்டை நன்னிலை படுத்த இயலாது என்றார்.