மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), அதன் அதிகாரி ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டதற்கும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்மீதான விசாரணைக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது.
அந்த அதிகாரி ஆணையத்தின் விசாரணைக்குட்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவரிடமிருந்து பாதுகாப்புப் பணமாக ரிம20,000 பெற்றார் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என எம்ஏசிசி இயக்குனர்(விசாரணை) அசாம் பாக்கி கூறினார்.
“எனவே, லிம்-மீதான விசாரணையில் ஆதாரங்களை மறைக்க முயன்றதற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுவது உண்மை அல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
“புத்ரா ஜெயா எம்ஏசிசி-இல் பணிபுரியும் அவ் வதிகாரி சிலாங்கூர் பாங்கியில் கைது செய்யப்பட்டார்”, என்றாரவர்.
லிம் சந்தை விலைக்கும் குறைவான விலையில் பங்களா வீடு வாங்கியதுமீதான விசாரணைக்கு உதவக்கூடிய ஆதாரங்களை எம்ஏசிசி ஒழிக்க முயல்வதாகவும் அதன் தொடர்பில் பினாங்கைச் சேர்ந்த ஓர் அதிகாரி 50,000 ரிங்கிட்டுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றும் இணையத்தில் பதிவிடப்பட்ட செய்தி குறித்து அவர் கருத்துரைத்தார்.

























