சரவாக் முதலமைச்சர் அடினான் சாதேம் மாநிலத் தேர்தலில் பிஎன் நேரடி வேட்பாளார்களைக் களமிறக்குவது பிஎன் அமைப்பு விதிகளை மீறும் செயலாகும் என சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி (எஸ்யுபிபி) சாடியுள்ளது.
“முதலைமைச்சர் பிஎன் கட்சிகளைச் சேராதவர்களை பிஎன் வேட்பாளர்களாக நியமித்ததன் மூலம் பிஎன் அமைப்பு விதிகளை மீறி இருக்கிறார்”, என சிபு எஸ்யுபிபி பிரச்சாரப் பிரிவுத் தலைவர் வொங் சிங் யோங் கூறினார்.
“கட்சித் தலைமை சங்கப் பதிவகத்திடம் இது குறித்து புகார் செய்ய வேண்டும்”, என்றாரவர்.
எஸ்யுபிபி-இன் ஆறு தொகுதிகள் அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அமைத்துள்ள ஐக்கிய மக்கள் கட்சி(யுபிபி)க்குக் கொடுக்கப்பட்டிருப்பது பற்றித்தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
“இது எஸ்யுபிபி-க்கு வெட்கத்துக்குரிய நாளாகும். 11 மாநிலத் தேர்தல்களில் பங்குபெற்று வந்துள்ள கட்சி முதல்முறையாக போர் முரசம் ஒலித்த கணமே ஆறு இடங்களை இழந்திருக்கிறது”, என வொங் கூறினார்.
யுபிபி பாரிசானுடன் நட்பு பாராட்டும் ஒரு கட்சிதான். ஆனால், அது பாரிசான் பங்காளைக் கட்சிகளில் ஒன்றல்ல. அதன் உறுப்பினர்களில் பெரும்பாலோர் எஸ்யுபிபி-இலிருந்து பிரிந்து சென்றவர்கள்.