புவா: 1எம்டிபி அறிக்கையில் வெட்டப்பட்ட வரிகள் முக்கியமானவை

lines1எம்டிபி   அறிக்கையிலிருந்து  பொதுக் கணக்குக்  குழுத்  தலைவர்  ஹசான்  அரிப்பின்  அகற்றிய  வரிகள்  விசாரணைக்கு  முக்கியமானவை  என்கிறார்  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா.

அறிக்கையிலிருந்து  குறிப்பிட்ட  வரிகளை  எடுத்து  விட்டதை  ஒப்புக்கொண்ட  ஹசான்,  முக்கியமானவை  அல்ல  என்று  நேற்றுக்  கூறியிருந்தது  குறித்து  புவா  கருத்துரைத்தார்.

ஆனாலும்  புவாவின்  கருத்தில்  அவை  முக்கியமான  வரிகள்.

அவ்வரிகள்,  1எம்டிபி- இலிருந்து  1எம்டிபியும் PetroSaudi Internationalலும்  கூட்டாக  நடத்திய  நிறுவனமான   Good Star Limited-உக்கு  யுஎஸ்$1.03 பில்லியன்  மாற்றிவிடப்பட்டது  பற்றிக்  குறிப்பிடுகின்றன.  Good Star Limited  தனிப்பட்ட  ஒருவருக்குச்  சொந்தமானது  என்றும்  அதற்கும்  PetroSaudi Internationalலுக்கும்  தொடர்பில்லை  என்று  பேங்க்  நெகாரா  தெரிவித்திருப்பதை   அவ்வரிகள்  சுட்டிக்காட்டுகின்றன.

“இது  11எம்டிபி  மீதான விசாரணைக்கு  ஒரு  முக்கியமான  தகவல். ஏனென்றால்  1எம்டிபி  நிறுவனமும்  அதன்   தலைவர்களும்  பெட்ரோசவூதியின்  துணை  நிறுவனம்தான்   குட்  ஸ்டார்  லிமிடெட்   என்று பிஏசிக்கு  அளித்த  சாட்சியத்தில்  தெரிவித்துள்ளனர்”, என  புவா  கூறினார்.

ஆனால்,  அதற்கான  உறுதியான  சான்றுகளை  அவர்களால்  காண்பிக்க  இயலவில்லை.

“குட்ஸ்டார்  லிமிடெட்   என்பது  பெட்ரோசவூதி  குழுமத்தின் ஒரு  பகுதிதான்  என்று பெட்ரோசவூதி  2015 ஆண்டில்  ஒரு  கடிதத்தில்  குறிப்பிட்டிருப்பதை  மட்டுமே  அவர்களால் காண்பிக்க  முடிந்தது.

“அக்கடிதம்  எந்த  நீதிமன்றத்திலும்  எடுபடாது. அதை  அப்படியே  ஏற்றுக்கொண்டால்  உலகம்  பிஏசியைப்  பார்த்துக்  கைகொட்டிச்  சிரிக்கும்”, என  புவா  அறிக்கை  ஒன்றில்  கூறினார்.

அவை  முக்கியமான  வரிகள்  அல்ல  என்றால்  ஹசான்  ஏன்  அவற்றைத்  தன்மூப்பாக  நீக்க  வேண்டும்  என்று  கேள்வி  எழுப்பிய  புவா,  அதில்  தெரிவிக்கப்பட்டிருக்கும்  தகவலில்  தெளிவில்லை  என்றும்  அதன்மீது  விசாரணை  நடப்பதாகவும்  பிஏசி  தலைவர்  கூறியிருப்பதையும்  சாடினார்.

“பேங்க்  நெகாரா  கண்டுபிடித்துக்  கூறியுள்ள  ‘குட் ஸ்டார்  லிமிடெட்டால்  நன்மை  அடைகின்றவர்  ஒரு  தனிப்பட்ட  நபர். அவருக்கும்  பெட்ரோசவூதி  இண்டர்நேசனலுக்கும்  தொடர்பில்லை’என்பதில்  எது  தெளிவாக  இல்லை  என்பதை  பிஏசி  தலைவர்  நாடாளுமன்றத்துக்கும்  மற்றவர்களுக்கும்  தெரியப்படுத்த  வேண்டும்.

“பேங்க்  நெகாராவின்  அதிகாரம் குறித்தும்  அது  கண்டறிந்து  கூறியிருக்கும்  தகவல்  குறித்தும்  பிஏசி  தலைவர்  கேள்வி  எழுப்புகிறாரா?”, எனவும்  புவா  வினவினார்.