ஹலோ பேராசிரியர் தியோ, இனவாதத்தின் தோற்றுவாய் அம்னோ, தெரிந்துகொள்வீர்

 

kulaநாட்டில் இனவாதத்தை எதிர்க்க ஒரே வகைக் கல்வி அமைவுமுறையை அமல்படுத்த வேண்டும் என்று யுகேஎம் பல்கலைக்கழக பேராசிரியர் தியோ கோக் சியோங் கேட்டுக்கொண்டுள்ளார்.

பேராசிரியர் தியோவின் கூற்று தவறானது. ஏனென்றால், மலேசியாவின் இனவாதப் போக்கிற்கு பல்வகைக் கல்வி அமைவுமுறை அமலில் இருப்பது காரணமல்ல. ஆகவே, ஒரே வகைக் கல்வி அமைவுமுறை அதற்கு தீர்வாகாது என்று டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் எதிர்வினையாற்றியுள்ளார்.

பேராசிரியர் தியோ அவர் இருக்கும் உயர்மட்ட நிலையிலிருந்து இறங்கி வந்து இந்நாட்டில் இனவாதம் வளர்ச்சி கண்டு வருவதற்கான காரணம் என்ன என்பதை துணிச்சலோடு பார்க்க வேண்டும் என்று பேராசியருக்கு ஆலோசனை கூறிய குலா, இந்நாட்டின் இனவாதத்திற்கு முக்கிய காரணமாக இருப்பவை அம்னோவின் இனவாத அரசியல், இனவாதக் கொள்கைகள் மற்றும் இனவாத உரைகள் என்பதை அவரால் தெரிந்து கொள்ள முடியாதா என்று வினவினார்.

 

ஏன் தாய்மொழிப்பள்ளிகள் மீது கண் வைக்கிறார்?

 

உண்மையான காரணங்கள் மீது கவனம் செலுத்த வேண்டிய பேராசிரியர் தியோ, ஏன் தாய்மொழிப்பள்ளிகள் மீது கண் வைக்கிறார் என்று குலா வினவினார்.

இந்நாட்டின் முன்னாள் மற்றும் இந்நாள் அரசாங்கத் தலைவர்களும், எதிரணித் தலைவர்களும் தாய்மொழிப்பள்ளிகளில் கல்வி கற்றவர்கள். இக்கல்விப் பின்னணியின் விளைவாக அவர்களில் யார் இனவாதிகள் என்று சுட்டிக்காட்டுமாறு குலசேகரன் பேராசிரியர் தியோவுக்கு சவால் விடுத்தார்.

“மொழி ஒருவரை இனவாதி ஆக்குவதில்லை. மொழி மக்களைப் பிளவுப்படுத்துவதில்லை” என்று பேராசிரியருக்கு பாடம் போதித்த குலா, பேராசிரியர் தியோ போன்றவர்கள் நாட்டில் ஒற்றுமை இல்லாததற்கு அல்லது இனவாதத்திற்கு தாய்மொழிப்பள்ளிகள்தான் காரணம் என்று குற்றம் சுமத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

மலாய்க்காரர் அல்லாத பெற்றோர்கள் ஏன் தங்களுடைய குழந்தைகளைத் தாய்மொழிப்பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் என்பதற்கும், ஏன் தேசியப்பள்ளிகள் பெற்றோர்களின் முதன்மைத் தேர்வாக இல்லை என்பதற்கும் கூட பல காரணங்கள் இருக்கின்றன. தியோ போன்ற ஒரு பேராசிரியருக்கு தாம் போதிக்க வேண்டியதில்லை என்று கூறிய குலா, பிரச்சனைகளைக் கண்டறிவதற்கு அவருக்கு தேவைப்படுவதெல்லாம் திண்மையும் திறனாய்வு செய்வதற்கான மனமும் கொண்ட தயார்நிலைதான் என்றார்.

தாய்மொழிக் கல்வி கற்பதற்கான உரிமைக்கு அரசமைப்புச் சட்டத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்பது தியோவுக்கு தெரிந்திருக்க வேண்டும். அவர் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று குலா வலியுறுத்தினார்.

மேலும், உண்மையில் நாட்டில் நிலவும் ஒற்றுமையின்மைக்கும் இனவாதத்திற்கும் தாய்மொழிப்பள்ளிகள் காரணமல்லாத நிலையில், அவற்றை ஒழித்துக்கட்டுவது இன்னும் அதிகமான ஒற்றுமையின்மைக்கு இட்டுச் செல்லும் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும் என்றார் குலசேகரன்.