முதலமைச்சர் முஸ்லிமாக இருக்க பாரிசானுக்கு வாக்களியுங்கள்

 

Muslimcmஎதிர்வரும் மே 7 இல் நடைபெறவிருக்கும் சரவாக் மாநில தேர்தலில் அம்மாநில முஸ்லிம்கள் பாரிசானுக்கு வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு முஸ்லிம் தலைவர் தொடர்ந்து மாநில அரசாங்கத்திற்கு தலைமை ஏற்க முடியும் என்று நங்கா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அன்னுவார் ராபாயி கூறினார்.

இம்மாநிலத்தில் நாம் பெரும்பான்மையானவர்களாக இல்லை என்றாலும் நமக்கு இம்மாநிலத்தை ஆள்வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதை நாம் உணர்ந்திருக்க வேண்டும் என்று அன்னுவார் கூறினார்.

இந்த வாய்ப்பை நாம் இழந்து விடக்கூடாது என்று சிபுவில் சுமார் 400 பேர் பங்கேற்ற “இஸ்லாமியக் குடும்பமும் தலைமைத்துவமும்” என்ற தலைப்பைக் கொண்ட ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

தற்போதைய தலைமைத்துவத்திற்கு நல்ல ஆதரவு இருப்பதால் நாம் தொடர்ந்து அதை ஆதரிக்க வேண்டும். அத்தலைமைத்துவம் இஸ்லாமிய சமூகத்தையும் இதர சமயங்களையும் நியாயமாக நடத்துகிறது என்றாரவர்.

பின்னர், அவரது அறிக்கை குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட போது, முஸ்லிம்கள் முஸ்லிம் தலைமைத்துவத்தைத் தற்காக்க வேண்டும் கூறியதின் மூலம் தாம் சமய மற்றும் இனவாதத்தைத் தூவவில்லை என்றார்.

இது தாம் ஓர் இனவாதி என்பதாகாது. நாம் அனைவருக்கும் நியாயமாக இருந்திருக்கிறோம் என்று தாம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

இதில் இனவாதம் ஏதும் இல்லை. தயவு செய்து இனவாத பிரச்சனைகளுடன் விளையாட வேண்டாம் என்று அன்னுவார் மேலும் கூறினார்.