குழந்தை பராமரிப்பு விவகாரத்தில் ரித்துவானை கைது செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது

 

Arrest Riduthvanஆசிரியை இந்திரா காந்தியின் மகள் பிரசன்னா டிக்சாவை இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்து கடத்தி சென்றுவிட்ட விவகாரத்தில் கே. பத்மநாதன் @ முகமட் ரித்துவான் அப்துல்லாவை கைது செய்யும்படி பெடரல் உச்சநீதிமன்றம் இன்று போலீஸ் படைத் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது.

இத்தீர்ப்பின் மூலம் பெடரல் நீதிமன்ற அமர்வின் தலைவர் நீதிபதி முகமட் ராவுஸ் ஷரீப் இதற்கு முன்னர் இவ்வழக்கில் ஈப்போ உயர்நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை நிலைநிறுத்தியதுடன் இக்கைது உத்தரவைக் கண்காணிக்கும்படி ஈப்போ உயர்நீதிமன்றத்திற்கு கட்டளையிட்டுள்ளார்.

ஏகமனதான இத்தீர்ப்பை எழுதிய நீதிபதி ராவுஸ் நீதிமன்ற உத்தரவுப்படி குழந்தையை நீதிமன்றத்திற்குக் கொண்டுவரத் தவறிய பத்மநாதனை கடிந்துரைத்துள்ளார்.

“வழக்கு அவருக்குச் சாதகமாக இல்லாத போது அவர் நீதிமன்ற பரிபாலனத்திற்கு உட்பட மறுத்து விட்டார். அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம் என்பதோடு அவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு உத்தரவு நிறைவேற்றப்பட வேண்டும்.

“நாங்கள் (நீதிமன்ற அவமதிப்பு) உத்தரவை நிறைவேற்ற உத்தரவிடுகிறோம், மேல்முறையீட்டை அனுமதிக்கிறோம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பெரும்பான்மை தீர்ப்பை தள்ளுபடி செய்கிறோம். நாங்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் சிறுபான்மை தீர்ப்பையும் (ஈப்போ) உயர்நீதிமன்றத்தின் (தீர்ப்பையும்) நிலைநிறுத்துகிறோம். கைது ஆணை உத்தரவை கண்காணிக்க நாங்கள் இவ்வழக்கை ஈப்போ உயர்நீதிமன்றத்திற்கு அனுப்புகிறோம்”, என்று நீதிபதி ராவுஸ் தமது தீர்ப்பில் கூறுகிறார்.

நீதிபதிகள் அஸாஹர் முகமட், ஸஹாரா இப்ராகிம் மற்றும் அஸியா அலி ஆகியோர் இந்த பெடரல் உச்சநீதிமன்ற அமர்வின் இதர உறுப்பினர்கள் ஆவர்.

கண்ணீரில் இந்திரா

தனது கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்ட இந்திரா, தாம் இத்தீர்ப்பால் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். தமது மகள் பிரசன்னா டிக்சாவுடன் மீண்டும் ஒன்றிணைவேன் என்று நம்புவதாக அவர் கூறினார்.

இந்திராவின் சார்பில் வழக்காடிய அவரது வழக்குரைஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மு. குலசேகரன் இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஏனென்றால் நீதிமன்றம் போலீஸ் படைத் தலைவரை (ஐஜிபி) அதன் தீர்ப்புக்கு பணிய கட்டாயப்படுத்தியுள்ளது என்றார்.

“ஓர் அரசு ஊழியர் என்ற முறையில், அவர் (ஐஜிபி)கேள்வி கேட்கக் கூடாது, மாறாக உத்தரவுக்குப் பணிய வேண்டும். அவர் இப்போது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றுடன் இருப்பதால், அவர் பத்மநாதனைக் கைது செய்ய அவரது அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்”, என்றார் குலா.

இந்திரா காந்தியின் மகளை இஸ்லாத்திற்கு மாறி விட்ட அவரது முன்னாள் கணவர் கடத்திச் சென்ற போது அது 11 மாத குழந்தையாகும். கடந்த எட்டு ஆண்டுகளாக இந்திரா அவரது மகள் பிரசன்னா டிக்சாவை பார்த்ததில்லை.