ஹாடியின் ஹூடுட்: அது மசோதா அல்ல. அது ஒரு முன்மொழிதல் என்கிறார் சுரேந்திரன்

 

pkr_n_surendran_01கடந்த வியாழக்கிழமை, நாடாளுமன்றத்தில் பிரதமர் துறை அமைச்சர் அஸாலினா ஓத்மான் சைட் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் முன்மொழிதலுக்கு முன்னிடம் அளிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அதற்கு எதிரணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அடுத்து, சட்டம் 355 க்கு திருத்தம் கொணரும் அவரது தனிப்பட்ட உறுப்பினர் மசோதாவை ( Private Member’s Bill) அது ஏதோ மசோதாவுக்கான முதல் வாசிப்பு (First Reading of a Bill) போல் ஹாடி எழுந்து நின்று அதை வாசித்தார்.

ஆனால், கதையே வேறு என்கிறார் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் என். சுரேந்திரன்.

அது மசோதா அல்ல. மாறாக, அத்தனிப்பட்ட உறுப்பினரின் மசோதாவுக்கு நாடாளுமன்ற நடவடிக்கை பட்டியலில் அதற்கு முன்னிடம் அளிக்கக் கோரும் ஒரு முன்மொழிதல் என்று சுரேந்திரன் விளக்கம் அளித்தார்.

“அனைத்து ஊடகங்களும் அது மசோதா என்று செய்தி வெளியிட்டன. மசோதா வெளிப்படவே இல்லை. அது ஒரு முன்மொழிதல், மசோதா அல்ல”, என்று சுரேந்திரன் மலேசியாகினியிடம் கூறினார்.

நாடாளுமன்ற நிறைநிலை விதி 49 ஐ சுட்டிக் காட்டி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அவையின் அனுமதியைப் பெற்றால் மட்டுமே தனிப்பட்ட உறுப்பினரின் மசோதா தாக்கல் செய்ய முடியும் என்றாரவர்.

ஹாடி அவரது தனிப்பட்ட உறுப்பினர் மசோதாவை தாக்கல் செய்வதற்கான அவையின் அனுமதியைக் கோரும் முன்மொழிதலை தாக்கல் செய்தார் என்று சுரேந்திரன் கூறினார்.

இக்குழப்பத்திற்கு இன்னொரு காரணமும் உண்டு. நடைமுறையில் அரசாங்கம் தாக்கல் செய்யும் மசோதாவுக்கும் தனிப்பட்ட உறுப்பினர் தாக்கல் செய்யும் மசோதாவுக்கும் இடையில் வேறுபாடு உண்டு. அரசாங்கம் அதன் மசோதாவை முதல் வாசிப்புக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்பு அவையின் முன்அனுமதி கோர வேண்டிய தேவையில்லை.

கடந்த வியாழக்கிழமை நடந்த சம்பவத்தில், மக்கள் அவைத் தலைவர் பன்டிக்கார் அமின் மூலீயா மசோதாவை விளக்குமாறு ஹாடியை கேட்டுக்கொண்டார். ஹாடி அந்த முன்மொழிதலைத் தள்ளிப்போடுமாறு கேட்டுக்கொண்டார்.

ஆகவே, ஒரு தனிப்பட்ட உறுப்பினரின் மசோதாவை தாக்கல் செய்வதற்கு அனுமதி கோரும் ஹாடியின் முன்மொழிதல் மீது முடிவு எடுக்கப்படவில்லை ஏனென்றால் அவரது முன்மொழிதலுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

இதன் விளைவு என்னவென்றால், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் முதலில் செய்ய வேண்டியது தனிப்பட்ட உறுப்பினரின் மசோதாவை தாக்கல் செய்வதற்கு (அனுமதி கோரும்) அதே முன்மொழிதலை மீண்டும் கொணர்வதாகும்.

“இந்த முன்மொழிதல் தீர்மானிக்கப்படும் வரையில் தனிப்பட்ட உறுப்பினரின் மசோதா என்பதே கிடையாது. ஆக, அடுத்த கூட்டத்தில் ஹாடி அதே முன்மொழிதலை மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும்.

“முதலாவது அல்லது இரண்டாவது வாசிப்பு (first or second reading of the Bill) என்பதே கிடையாது, ஏனென்றால் அனுமதி கோரும் முன்மொழிதல் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை”, என்று சுரேந்திரன் மேலும் கூறினார்.