பாஸிலிருந்து பிரிந்து சென்ற அமானா கட்சி, சுங்கை புசார் தொகுதித் தலைவர் அஸ்கார் அப்துல் ஷுக்குரை சுங்கை புசார் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான தனது வேட்பாளராக நியமிக்கும் எனக் கூறப்படுகிறது.
அஸ்கார்,50, முன்னாள் ஆசிரியர். இப்போது சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.
இந்த இடைத் தேர்தலில் அமானா தலைவர் முகம்மட் சாபு (மாட் சாபு), துணைத் தலைவர் சலாஹுடின் ஆயுப், முன்னாள் பேராக் மந்திரி புசார் முகம்மட் நிஜார் ஜமாலுடின் போன்ற பெருந் தலைகள் போட்டியிடக்கூடும் என்றுதான் இதுவரை ஆருடங்கள் கூறப்பட்டு வந்தன.
இப்போது ஏன் இந்த மாற்றம் என்று மலேசியாகினி அமானா வட்டாரமொன்றை வினவியது. அதற்கு நடக்கப்போகும் இந்த இடைத் தேர்தல்கள் இரண்டும் ஒரு “சோதனைக் களம்” என்று பதில் வந்தது.
“இந்த இடைத் தேர்தல்கள் மூலம் சந்தை நிலவரத்தைச் சோதித்தறிவோம். அமானா உருவாகி ஏழு மாதங்கள்தான் ஆகின்றன. மாட் சாபு அல்லது சலாஹுடினைக் களமிறக்கித் தோல்வி கண்டால் அது கட்சிக்கு நல்லதல்ல”, என்று அவ்வட்டாரம் தெரிவித்தது.
ஆனால், இந்த ஆருடங்கள் புதன்கிழமை முடிவுக்கு வரும். அன்றுதான் பக்கத்தான் ஹராபான் தன் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.