1எம்டிபி தணிக்கை அறிக்கையின் உள்ளடக்கம் வெளியில் தெரியக்கூடாது என்று தேசிய கணக்காய்வுத் துறை நாடாளுமன்ற பொதுக் கணக்குக்குழு (பிஏசி) உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை செய்திருந்தது என அத்துறையின் துணைத் தலைவர் நோர் சல்வானி முகம்மட் கூறினார்.
அந்த அறிக்கையை பிஏசி-இடம் ஒப்படைத்தபோதே தலைமைக் கணக்காய்வாளர் அம்ரின் புவாங் அந்தக் கடும் எச்சரிக்கையையும் விடுத்திருந்தார்.
அதிலிருந்து எதுவும் கசிந்தால் போலீசில் புகார் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்ததாக அவர் இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கூறினார்.
நோர் சல்வானி, பாண்டான் எம்பி முகம்மட் ரபிசி ரம்லியின் வழக்கில் இன்று சாட்சியம் அளித்தார்.
ரபிசி, அதிகாரத்துவ இரகசியச் சட்டத்தின் 8(1) (சி) (iii) மற்றும் 8(1) (சி)(iv) ஆகிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார். அதிகாரப்பூர்வ அனுமதியின்றி 1எம்டிபி தணிக்கை அறிக்கையின் 98வது பக்கத்தை வைத்திருந்தார் என்பது ஒரு குற்றச்சாட்டு; அதிகாரப்பூர்வ அனுமதியின்றி அந்த அறிக்கையில் உள்ளதை வெளியில் தெரிவித்தார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு.
அவ்வறிக்கை இன்றளவும் ‘இரகசியம்’ என்றே வகை படுத்தப்பட்டிருப்பதாக நோர் சல்வானி கூறினார்.
ரபிசி வழக்கில் முதல் சாட்சியே அவர்தான்.