எதை எங்களுக்கு இரவல் கொடுத்தீர்கள்? பாஸ் இளைஞர் தலைவரைச் சாடுகிறது டிஏபி

loke aபாஸ்  கடந்த  பொதுத்  தேர்தலில்  டிஏபி-க்கு சில  இடங்களை  இரவல்  கொடுத்ததாகவும்  அந்த  இடங்களைத்  திரும்பப்  பெற  வேண்டும்  என்றும்  அக்கட்சியின்  இளைஞர்  தலைவர்  நிக்  முகம்மட்  அப்டு   நிக்  அப்துல்  அசீஸ்  கோரிக்கை  விடுக்க  அப்படியெல்லாம்  எதுவும்  கிடையாது  என்று  டிஏபி  தலைவர்  ஒருவர்  மறுக்கிறார்.

அப்படிப்பட்ட  ஏற்பாடுகள்  எதுவும்  அவ்விரண்டு  கட்சிகளுக்குமிடையில்  இல்லை  என  டிஏபி  ஏற்பாட்டுக்குழுச்  செயலாளர்  அந்தோனி  லொக்  கூறினார்.

“டிஏபி  50 ஆண்டுக்காலமாக  மலேசிய  அரசியல்  அரங்கில்  போராடிவரும்  ஒரு  கட்சி  என்பதை  நிக்  அப்டுவுக்கு  நினைவுபடுத்த  விரும்புகிறேன்.

“கடந்த  பொதுத்  தேர்தலில்  டிஏபி  போட்டியிட்டு  வென்ற  இடங்கள்  எல்லாமே  1969ஆம்  ஆண்டு  முதல்  அது  போட்டியிட்டுவரும்  இடங்களாகும்”,  என  லொக்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

சமயப் பற்றாளர்  என்று  கூறப்படும்  நிக்  அப்டு  பொறுப்புடன்  பேச  வேண்டும், ஆதாரங்களுடன்  கூடிய  உண்மைகளையே  சொல்ல  வேண்டும்  என்றும்  அவர்  சொன்னார்.

பக்கத்தான்   கூட்டணியில்  இருந்தபோது  பாஸ்  மட்டுமே  தியாகங்களைச்  செய்தது  என்பதுபோன்ற  தோற்றத்தை  ஏற்படுத்த  முனைகிறார்  பாஸ்  இளைஞர்  தலைவர்  என்று  லொக்  சாடினார்.

“உண்மை  என்னவென்றால்  டிஏபி-யுடனும்  பிகேஆருடனும்  ஒத்துழைத்ததால்  பாஸும்  நன்மை  அடைந்தது. பாஸ்  முன்பு  வெற்றிபெறாத  இடங்களில்,  குறிப்பாக  பேராக்,  சிலாங்கூர்,  ஜோகூர்  ஆகியவற்றில்  வாகைசூட  நாங்கள்  உதவினோம்”, என்றாரவர்.