அபாண்டி அவர்களே,‘காதில் பூ சுற்றும் வேலை வேண்டாம்’

tiesசட்டத்துறைத்  துறைத்  தலைவர்   (ஏஜி)  முகம்மட்  அபாண்டி  அலி வழக்குரைஞர்  தொழில்  சட்ட(எல்பிஏ)த்துக்குத்  திருத்தங்களைப்  பரிந்துரைத்திருப்பதை   நாடாளுமன்ற  உறுப்பினர்  ஒருவர்  சாடினார்.

அலோர்  ஸ்டார்  எம்பியும்  பிகேஆர்  உச்சமன்ற  உறுப்பினருமான  கூய்  ஹிஸ்யாவ்  லியோங்,  வழக்குரைஞர்  மன்றத்துக்கு  அரசாங்கப்  பிரதிநிதிகளை  நியமனம்  செய்வது அரசாங்கத்துக்கும்  மன்றத்துக்குமிடையில் நல்லுறவுகளை  வளர்க்கத்தான்  என்று  அபாண்டி  கூறியிருப்பதை  “நம்ப  முடியாத  கதை”  என்று  வருணித்து   “காதில்  பூ  சுற்றும்  வேலை  வேண்டாம்”  என்றும் சாடினார்.

“எல்பிஏ-க்குத்  திருத்தங்களைக்  கொண்டுவரும்  அரசாங்கத்தின்  உத்தேசம்,  அதுவும்   ரிம2.6பில்லியன்  நன்கொடை  ஊழல்  தொடர்பில்  நஜிப்  குற்றவாளி   அல்ல  என்று  ஏஜி  செய்த  முடிவை  எதிர்த்து  வழக்குரைஞர்  மன்றம்   வழக்குத்   தொடுத்திருக்கும்  வேளையில்  இவ்வாறு  உத்தேசிக்கப்பட்டிருப்பது  வழக்குரைஞர்  மன்றத்தின்  சுதந்திரத்துக்குக்   குழிபறிக்கும்  ஓர்  அப்பட்டமான  முயற்சி”,  என  அவர்  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

“திருத்தங்களைப்  பரிந்துரைப்பதற்குமுன்  வழக்குரைஞர்  மன்றத்துடன்  கலந்தாலோசிக்கும்  மரியாதைக்  கூட  அரசாங்கத்திடம்  இல்லாமல்  போய்விட்டது.

“எல்பிஏ-க்குத்  திருத்தங்கள்  கொண்டுவர  ஒருதலைப்பட்சமாக  முடிவு  செய்து  விட்டு  ஏப்ரலில்தான்  அது  பற்றி  மின்னஞ்சல்  வழி  வழக்கறிஞர்  மன்றத்துக்குத்  தகவல்  அளிக்கப்பட்டு   ஏழு  நாள்களுக்குள்  பதிலளிக்க  வேண்டும்  என்றும்  தவறினால்  அரசாங்கப்  பரிந்துரைகளை   மன்றம்  ஏற்றுக்கொண்டதாக  புரிந்து  கொள்ளப்படும்  என்றும்  கூறப்பட்டதாக  நான்  அறிகிறேன்”, என  கூய்  கூறினார்.

இப்படியெல்லாம்  நடந்திருக்கும்போது  அரசாங்கத்துக்கும்  மன்றத்துக்குமிடையில்  நட்புறவையும்  அணுக்கமான  உறவுகளையும்  வளர்க்க  விரும்புவதாக  அபாண்டி  கூறுகிறாரே  இதில்  அந்த  நட்பும்  அணுக்கமும்  எங்கே  இருக்கிறது  என்றவர்  வினவினார்.

அரசாங்கத்தின்  பரிந்துரைகள் ‘ரகசியம்’  என்று  முத்திரை  குத்தப்பட்டிருந்ததால்  வழக்குரைஞர்   மன்றத்தால்  அதன்  உறுப்பினர்களிடம்  வெளிப்படையாக  விவாதிக்கவும்  முடியாமல்  போய்விட்டது  என்றும்  கூய்  கூறினார்.