ஆய்வாளர்: முடிவெடுக்காத நிலையில் உள்ள 30 விழுக்காட்டு வாக்காளர்களைக் கவர்வதே அஸ்மினை எதிர்நோக்கும் சவால்

challengeசிலாங்கூரில் 30 விழுக்காட்டு  வாக்காளர்கள்-  இவர்களில்  மிகப்  பலர்  இளைஞர்கள்-  யாருக்கு வாக்களிப்பது  என்பதை  முடிவு  செய்யாமலிருப்பவர்கள்.  இவர்களை  பிகேஆர்  பக்கம்  வளைத்துப்போடுவதே சிலாங்கூர்  மந்திரி  புசார்  முகம்மட்  அஸ்மின்  அலியை  எதிர்நோக்கும்  மிகப்  பெரிய  சவாலாகும்  என்று  அரசியல்  ஆய்வாளர் பேராசிரியர்  ஹம்டான்  ஒஸ்மான்  கூறுகிறார்.

பக்கத்தான்  ஹராபான்  மக்களின்  ஆதரவு  என்றென்றும்  தனக்குத்தான்  என்ற  மிதப்பான  எண்ணக்த்தில்  உள்ளது  என்றாரவர்.

பாஸும்   அம்னோவும்  தமக்கென   வாக்காளர்களை  வைத்துள்ளன. பக்கத்தான்  கட்சிகளின்  நிலை  அதுவல்ல,   அவர்களின்  வாக்காளர்கள்  மாறும்  நிலவரங்களுக்கு  ஏற்ப  மாறுவதை  அண்மைய  தேர்தல்கள்  தெளிவாக   காட்டின  என  ஹம்டான்  கூறினார்.

“அவர்கள் (ஹராபான்) இதைப்  புரிந்து  கொள்ள  வேண்டும்”,  என்ற  ஹம்டான்  2014 தேலோக்  இந்தான்  இடைத்  தேர்தல்  தொடங்கி  இந்தப்  போக்கு  தொடர்கிறது  என்றார்.

அதில் சீனர்களின்  வாக்குகள்  பிஎன்னுக்குச்   சாதகமாக  திரும்பியதையும்  ஹராபான்  வாக்காளர்கள்  குறைந்த  எண்ணிக்கையில்தான்  வாக்களிக்க  வந்ததையும்  காண  முடிந்தது  என்றும்  அவர்  சொன்னார்.

ஹராபான்  வாக்காளர்களின்   குறைந்த  எண்ணிக்கை  “எதிர்ப்பின்”  அறிகுறியாகும்.

அண்மைய  சுங்கை  புசார்  இடைத்  தேர்தலிலும்  74.29  விழுக்காட்டினர்தான்  வாக்களித்தனர்.  அது,  2003-இல்  ஒரு  தனித்  தொகுதியாக  உருவாக்கப்பட்டதிலிருந்து  வாக்காளர்  எண்ணிக்கை  இவ்வளவு  குறைவாக  இருந்தது  இல்லை.

“இது  எதிர்ப்பைக்  காட்டும் ஒர்  அறிகுறி.  வாக்காளர்களுக்கு  பிஎன்னைப்  பிடிக்காதிருக்கலாம். அதே  வேளை  எதிரணியைத்  தேர்ந்தெடுக்கவும்  அவர்கள்  விரும்பவில்லை.

“வருங்காலத்தில்  மும்முனைப் போட்டியுள்ள  இடங்களில்  இப்போது  ஹராபான்  வசமுள்ள  பல  இடங்கள்  கைமாறக்  கூடும்.  எதிர்ப்பு  வாக்காளர்கள்  ஒன்று  பிஎன்னுக்கு  வாக்களிக்கலாம்  அல்லது  வாக்களிக்காமலேயே  இருந்து  விடலாம்”,  என  ஹம்டான்  கூறினார்.

சுபாங்,  ஷா  ஆலம்,  கிள்ளான்,  கோம்பாக்  ஆகியவை  ஆபத்தான  இடங்கள்  என்றாரவர்.

“அங்குள்ள  வாக்காளர்கள்  கொள்கைகளை  ஆராய்வார்கள்.  கொள்கைகள்  செயல்படுத்தப்பட்ட  விதத்தை  இன்னும்  பல  விவகாரங்களையெல்லாம்  அலசி  ஆராயக்  கூடியவர்கள்.  அவர்களில்  பலர் தங்கள்  எதிர்ப்பைக்  காட்டவும்  முனைவார்கள்”,  என்றாரவர்.

ஹராபான்  அடுத்த  அரசாங்கத்தை  அமைக்க  அது  தயாராக  உள்ளது  போன்ற  தோற்றத்தை  உருவாக்கிக்  காட்டாமல்  இருப்பதுதான்  அதன்  மிகப்  பெரிய  பலவீனம்  என்கிறார்  ஹம்டான்.

“சிலாங்கூர்,  பினாங்கு,  கிளந்தான்  அரசுகள்  தனித்தனியே  செயல்படுகின்றன.  கூட்டரசு  நிலையில்   ஒன்றுபட்ட  எதிரணியை  உருவாக்கும்   முயற்சியையே  காணோம்”,  என்றார்.

அதே  வேளை  சிலாங்கூரில்  பிகேஆர்,  டிஏபி,  பாஸ்  மற்றும்  பாஸிலிருந்து  பிரிந்து  சென்ற  பார்டி  அமனா  நெகாரா  ஆகியவற்றை  ஒன்றாக  பிடித்து  வைத்திருப்பதற்காக  அஸ்மினை  அவர்  பாராட்டினார்.

சிலாங்கூரில்  பாஸும்  அமனாவும்  ‘நட்பான எதிரிகளாக’த்தான்  நடந்து  கொள்கின்றன.

“அமனா  கவுன்சிலர்களாக  மாநில  அரசில்  இடம்பெற்றுள்ளது.  பாஸ்,  ஆட்சிக்குழுவில்  இடம்  பிடித்திருக்கிறது.

“அடுத்த  பொதுத்  தேர்தலில்  போட்டி  என்று  வரும்போது  இந்நிலை  என்னவாகும்?”,  என்று  ஹம்டான்  வினவினார்.