நஜிப்பின் பெயரைச் சொல்லுங்கள், வெளிநாடுகளுக்கு மகாதிர் அறிவுறுத்து

mahமுன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்,    அமெரிக்கா,   ஆஸ்திரேலியா   முதலிய   நாடுகள்   1எம்டிபி    மோசடி   தொடர்பில்   பிரதமர்  நஜிப்  அப்துல்   ரசாக்கின்  பெயரைச்   சொல்லி  அவருக்குத்  தலைக்குனிவு   ஏற்படுத்தத்   தயங்கக்   கூடாது  என்றார்.

“பல  நாடுகள்       இவை   எல்லாவற்றுக்கும்   பிரதமர்தான்   காரணம்    என்று   வெளிப்படையாகக்  கூறத்    தயங்குகின்றன   என்பதை   நான்   அறிவேன்”,  என  மகாதிர்   ஏபிசி-க்கு   அளித்த  நேர்காணலில்    தெரிவித்தார்.

1எம்டிபி-இல்  கையாடப்பட்ட  பணம்   தொடர்பில்    அமெரிக்க  நீதித்துறை   தொடர்ந்துள்ள    சிவில்   வழக்குகளில்   நஜிப்பின்  பெயர்  குறிப்பிடப்படவில்லை   என்றாலும்   ‘மலேசிய  முதல்நிலை  அதிகாரி’  என்று அடிக்கடி   குறிப்பிடப்படுகிறது.

வழக்குகளில்    தெரிவிக்கப்பட்டுள்ள    தகவல்களை  அடிப்படையாகக்   கொண்டு  பார்க்கும்போது    அந்த  ‘மலேசிய   முதல்நிலை    அதிகாரி’  1எம்டிபி  ஆலோசகர்  வாரியத்   தலைவராக   இருந்த   பிரதமர்தான்  என்று  ஊகிக்கப்படுகிறது.

நஜிப்பின்   தலைமைத்துவத்துக்கு   எதிராக    ஒரு  கருத்துக்கணிப்பு   நடத்தப்படுவதை      வரவேற்கிறாரா   என்ற   கேள்விக்கு   அரசாங்கம்    அதற்கு  இணக்கம்   தெரிவிப்பது   சந்தேகமே   என்று  மகாதிர்   கூறினார்.

“ஏனென்றால்    அது (அரசாங்கம்)  போலீஸ்   அதிகாரத்தைக்    கொண்டு   நாங்கள்  எதுவும்   செய்ய   முடியாதபடி        தடுத்து  விடும்”,  என்றார்.