தேர்தல் சீரமைப்புக்காக போராடிவரும் பெர்சே 2.0, பேரணி நடத்துவது குறித்து இறுதி முடிவு இன்னும் செய்யப்படவில்லை என இன்று கூறியது.
பேரணி நடத்துவது தொடர்பில் பெர்சே மற்ற சமூக அமைப்புகளுடன் கலந்து பேச வேண்டியுள்ளது என பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
பெர்சே பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கவிழ்க்கும் நோக்கத்தில் பேரணி நடத்துவதாக இருந்தால் அதற்கு அனுமதி கிடையாது என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் நேற்று அறிவித்திருந்தது பற்றி வினவியதற்கு மரியா அது பற்றிக் கருத்துரைக்க மறுத்தார்.
“நான் (பேரணி) நடத்தப்போவதாக இன்னும் அறிவிக்கவில்லை. அதனால் அவர் (ஐஜிபி) எதைப் பற்றிக் கூறுகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை”, என்றாரவர்.
“எங்களுக்கு அவகாசம் தேவை. இம்முறை நிதானமாக செயல்படுவதுதான் எங்கள் திட்டம்.
“முதலில் மற்ற சமூக அமைப்புகளுடன் கலந்து பேச வேண்டும்”, என மரியா தெரிவித்தார்.
1எம்டிபி பணத்தில் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் சொத்துகளைப் பறிமுதல் செய்ய அமெரிக்க நீதித்துறை சிவில் வழக்குகள் தொடர்ந்துள்ளதை அடுத்து அதன் தொடர்பில் பேரணி நடத்தும் எண்ணம் பெர்சேக்கு உண்டு என மரியா கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
பெர்சே பேரணி எங்கே நடத்தப்படும் கோலாலும்பூரிலா, நாட்டின் நிர்வாக தலைநகரமான புத்ரா ஜெயாவிலா என்றும் அவரிடம் வினவப்பட்டது.
“பேரணியின் நோக்கம்தான் முக்கியம் இடமல்ல”, என்றாரவர்.