சிங்கப்பூர் பிரதமரின் மனைவி வைத்திருந்த சிறு கைப்பையின் விலை எஸ்$15-தான்

sporeஅமெரிக்கப்  பயணம்   மேற்கொண்டு   வெள்ளை   மாளிகை    சென்றிருந்தபோது   சிங்கப்பூர்   பிரதமரின்  துணைவியார்    ஹோ  சிங்  அணிந்திருந்த    உடைகள்   குறித்து   முதலில்   கடுமையாக   விமர்சிக்கப்பட்டது.

அவரது   உடைகளையும்   அமெரிக்க   அதிபரின்  மனைவி   மிட்சல்   ஒபாமா   அணிந்திருந்த  உடைகளையும்   ஒப்பிட்ட   வலைமக்கள்  இரண்டுக்குமிடையிலுள்ள   வேறுபாடுகளைச்   சுட்டிக்காட்டி  குறைகூறினார்கள்.

“இன்னும்  கொஞ்சம்   பகட்டான  ஆடைகளைத்   தேர்வு  செய்திருக்கலாம்.

“அவருக்கு  ஒரு  ஒப்பனையாளர்   தேவை”,  என  அழகியல் துறை  நிபுணர்  சியு  டக்  வா   கூறியதாக   பிபிசி  நேற்று    அறிவித்திருந்தது.

ஹோ,    தம்     கணவர்    சிங்கப்பூர்   பிரதமர்  லீ  ஹிசியன்   லூங்குடன்  அமெரிக்கப்  பயணம்   மேற்கொண்டிருக்கிறார்.

ஆனால்,  ஹோ  தம்முடன்  வைத்திருந்த   சிறு   கைப்பையின்  விலை  எஸ்$15  தான்  என்பது   தெரிய  வந்ததும்  வலைமக்கள்   அவரது  எளிமை  கண்டு  வியந்து   போனார்கள். அதன்  பின்னர்  அவர்களின்  வசவுகள்  வாழ்த்துகளாக  மாறின.

டைனோசர்    உருவம்  பொறிக்கப்பட்ட   அந்தக்  கைப்பையை  வடிவமைத்தவர்       சிங்கப்பூரின்  ஆடிச  சிறார்களுக்கான  பள்ளியின்  மாணவராம்.

வழக்கமாக,  அப்பள்ளி  200  கைப்பைகளை  விற்பதற்கு  நான்கு   மாதங்களாகும்.  ஆனால்,  ஹோ   அந்தப்  பையை  வைத்திருக்கும்   விவரம்   வெளியானதும்   ஒரே  நாளில்  200  பைகள்   விற்கப்பட்டன.

இப்போது   அந்த  வகை  பைகள்  அத்தனையும்  விற்று   முடிந்து   விட்டனவாம்.