நஜிப் இந்தியர்களுக்கு மகாதிரைவிட அதிகமாகச் செய்திருக்கிறாராம்

najibatmic70மகாதிருடன் ஒப்பிடுகையில் அவர் எப்படி இந்தியச் சமூகத்திற்கு அதிகமாகச் செய்திருக்கிறார் என்பதை பிரதமர் நஜிப் நேற்றிரவு மஇகாவின் 70 ஆம் ஆண்டு விருந்து நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் சுட்டிக்காட்டினார்..

முன்னதாக இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கு இன்னும் அதிமாகச் செய்ய வேண்டியதின் தேவையை உணர்ந்த ஒரே பிரதமர் நஜிப்தான் என்று கூறினார்.

நஜிப்பின் பங்களிப்பை பட்டியலிட்ட சுப்ரமணியம் அவர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்கும் உதவிகளுக்கும் இந்திய சமூகம் நன்றியுடைதாக இருக்கிறது என்று கூறிய அவர், நஜிப்புக்கு பாராட்டு தெரிவிக்கும் அடையாளமாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தவர்களை எழுந்து நின்று ஆரவாரக் கைத்தட்டுதல் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

நஜிப், டாக்டர் சுப்ரமணியம் கூறியதைச் சுட்டிக்காட்டி அவர் அதை வேறுவகையிலும் கூறியிருக்கலாம், அதாவது “நான் பிரதமராக இருந்திருக்கும் ஏழு ஆண்டுகாலத்தில், நான் 22 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஒருவரைவிட கூடுதலாகச் செய்திருக்கிறேன்” என்றார்.    நஜிப் கூறியதை கேட்டு அங்கிருந்த 4,000 மேற்பட்டவர்கள், பெரும்பாலும் மஇகா உறுப்பினர்கள், கைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

மேலும் பேசிய பிரதமர் நஜிப், மஇகாவின் 70 ஆம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக சுப்ரமணியம் கேட்டிருந்த இரு கோரிக்கைகளை கவனத்தில் எடுத்துக்கொள்வாதாக தெரிவித்தார்.

சுப்ரமணியத்தின் கோரிக்கையில் ஒன்று, 1957 ஆண்டிற்கு முன்பு மலாயாவில் பிறந்து வாழ்ந்து இன்னும் குடியுரிமை கிடைக்காமல் இருப்பவர்களுக்காக ஒரு கொள்கை வகுக்கப்பட வேண்டும். இப்பிரச்சனையைத் திட்டவட்டமாக தீர்க்க வேண்டிய காலம் கணிந்து விட்டது என்பதை நஜிப் ஒப்புக்கொண்டார்.

இந்நாட்டிற்காக பல தியாகங்களைச் செய்த அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது சரியானதே என்றும் அவர் கூறினார்.

குறைந்த வருமானம் மற்றும் பிரச்சனைகளுக்குட்பட்ட குடும்பங்களிலிருந்து வரும் இந்திய மாணவர்களுக்கு உணவு வசதி உடைய பள்ளி தங்குமிடம் கட்டப்பட வேண்டும் என்ற சுப்ரமணியத்தின் இரண்டாவது கோரிக்கையை தாம் ஏற்றுக்கொள்வதாக கூறிய நஜிப், அவரே இதை முன்பு முன்மொழிந்துள்ளதாக தெரிவித்தார்.

பிஎன் சொல்வதைச் செய்யும்

இதுவரையில் அரசாங்கம் உதவியளித்துள்ள தனிப்பட்டவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கும்படி தாம் இந்திய விவகாரங்களுக்கான அமைச்சரை குழுவுக்கு உத்தரவிட்டுள்ளதாக நஜிப் தெரிவித்தார்.

அந்தப் பட்டியல் இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் பிஎன் பேசுவது மட்டுமில்லை, பேசுவதை செய்து, அதன் பலனை அனைத்து சமூகங்களுக்கும் அளிக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றாரவர்.

“நாங்கள் எதிரணியைப் போன்றவர்கள் அல்ல. அவர்கள் பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் சொன்னதைச் செய்கிறோம், கொடுக்கிறோம்”, என்று நஜிப் மேலும் கூறினார்.

அவரது உரையின் இறுதியில், பிஎன்னிலிருக்கும் அனைத்து (இந்திய) கட்சிகளும் மஇகாவின் கீழ் ஒன்றாக இணைய வேண்டும் என்று நஜிப் கேட்டுக்கொண்டார்.

இந்த விருந்து உபசரிப்பில் மசீச தலைவர் லியோ தியோங் லாய், பிபிஆர்எஸ் தலைவர் ஜோசப் குருப், முன்னாள் மஇகா தலைவர் ச. சாமிவேலு மற்றும் இதர உயர்மட்ட மஇகா தலைவர்களும் இருந்தனர்.