பேங்க் நெகரா, மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி), போலீஸ் ஆகியவை 1எம்டிபிமீது புலன்விசாரணையைத் தொடங்கி ஓராண்டுக்குமேல் ஆகிறது. எப்போதுதான் விசாரணை முடிவுக்கு வரும் என வழக்குரைஞர் முகம்மட் ஹனிப் காட்ரி அப்துல்லா கேட்கிறார்.
1எம்டிபி தொடர்பான வழக்குகளில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் வழக்குரைஞராக செயல்படும் ஹனிப் முகநூலில் 1எம்டிபி விசாரணை பற்றி எழுதியுள்ளார்.
அதில், சுவீஸ் அதிகாரிகள் Falcon தனியார் வங்கிமீது விசாரணையை முடுக்கி விட்டிருப்பதாகக் கூறும் நியு யோர்க் டைமஸ் செய்தி ஒன்றையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
“1எம்டிபி-இலிருந்து களவாடப்பட்ட பணத்தில் வாங்கப்பட்ட யுஎஸ்1 பில்லியன் மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்ய அமெரிக்க நீதித்துறை சிவில் வழக்கு தொடர்ந்திருப்பது பற்றி பரவலாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
“1எம்டிபி-இன் பணம் சலவைசெய்யப்பட்டது குறித்து விசாரணையைத் தொடங்கிய பல நாடுகளும் இப்போது நடவடிக்கையில் இறங்கியுள்ளன. ஆனால், நம் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் மட்டும் விசாரணை இன்னும் முதல் கட்டத்தில் இருப்பதாகவும் அது தொடர்கிறது என்றும் கூறியுள்ளார்”, என ஹனிப் குறிபிட்டார்.
முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேல் சிறப்பு விசாரணைக் குழுவை 2015 தொடக்கத்தில் அமைத்தார். இப்போது கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகப் போகிறது.
“வெளிநாடுகளில் எல்லாம் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். மலேசியாவில் மட்டும் விசாரணை முடியவில்லையா?”.
காலிட்தான் 1எம்டிபி மீதான விசாரணைக்குத் தலைமை ஏற்கிறார். விசாரணை செய்யும் பொறுப்பு போலீஸ் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் அது குறித்து எதுவும் சொல்ல மறுக்கிறது.