ஓஎஸ்ஏ குற்றச்சாட்டில் எதிர்வாதம் செய்யும்படி நீதிமன்றம் ரபிஸிக்கு உத்தரவு

rafiziகோலாலும்பூர்  செஷன்ஸ்   நீதிமன்றம்     பிகேஆர்   தலைமைச்    செயலாளர்   ரபிஸி     ரம்லியை      அதிகாரத்துவ   இரகசிய   சட்டம்    1972-இன்கீழ்   அவர்மீது    சுமத்தப்பட்டுள்ள   குற்றச்சாட்டுக்கு   எதிராக    எதிர்வாதம்  செய்ய  உத்தரவிட்டிருக்கிறது.

“அவர்மீது   வழக்கு  தொடுக்க   போதுமான   காரணங்கள்   இருப்பதை   அரசுத்தரப்பு   நிறுவியுள்ளது  எனக்  கருதுகிறேன்”,  என்று  செஷன்ஸ்   நீதிபதி    சுல்கர்னைன்  ஹசான்   கூறினார்.

அரசுத்தரப்பு   முன்வைத்த   காரணங்களையும்   நீதிபதி   சுட்டிக்காட்டினார்.  ரபிஸி,       ஓஎஸ்ஏ-இன்  கீழுள்ள   1எம்டிபி  மீதான    தலைமைக்  கணக்காய்வாளரின்  அறிக்கையின்   98வது  பக்கத்தை    தன்    கைவசம்  வைத்திருந்ததுடன்    அதை  வெளியிலும்   காண்பித்திருக்கிறார்.

இன்னும்  வெளியிடப்படாத   1எம்டிபி   கணக்கறிக்கையை   அவரது   அகப்பக்கத்திலும்  ரபிஸி  பதிவிட்டிருக்கிறார்.

“மார்ச்  24-ல்   செய்தியாளர்  கூட்டமொன்றையும்    நடத்தியுள்ளார். அக்கூட்டத்தின்  காணொளி   ஒன்றும்  நீதிமன்றத்தில்   காண்பிக்கப்பட்டது”, என  நீதிபதி   சுல்கர்னைன்   கூறினார்.

அக்கூட்டத்தில்    1எம்டிபி   அறிக்கை   இன்னும்    “ஓஎஸ்ஏ-இன்  கீழ்  உள்ளது”   என்பதை   ரபிஸி  ஒப்புக்கொண்டுமிருக்கிறார்.

ரபிஸி,    செப்டம்பர்   27-இல்  குற்றச்சாட்டுக்கு   எதிராக    எதிர்வாதத்தைத்   தாக்கல்   செய்ய     வேண்டும்.   அக்டோபர்   6,7  ஆகிய   தேதிகளில்   அவர்மீதான  வழக்கு    தொடர்ந்து   விசாரணை   செய்யப்படும்.