நஜிப்: ஆசியா உள்நாட்டு அரசியலில் அன்னியர் தலையீட்டை அனுமதிப்பதில்லை

najibஉள்நாட்டு   அரசியலில்   வெளியார்  தலையீட்டை   அனுமதிப்பதில்லை   என்பது   ஆசியாவின்   பொதுவான   கோட்பாடு  எனப்  பிரதமர்   நஜிப்  அப்துல்   ரசாக்  கூறினார்.

ஆசிய    அரசியல்    கட்சிகளின்     அனைத்துலக   மாநாடு(ஐசிஏபிபி),  அணிசேரா  நாடுகள்  இயக்கம்,   ஆசியான்   போன்ற   அனைத்துலக  அமைப்புகள்  பலவும்   அக்கோட்பாட்டைப்  பின்பற்றி   வந்துள்ளன என்றாரவர்.

“நம்  உள்விவகாரங்களில்     தலையிடுமாறு   வெளிநாடுகளைக்    கேட்டுக்கொள்ளும்  குடிமக்கள்   நாட்டுப்பற்றுள்ளவரகளாக  இருக்க  முடியாது.  அவர்கள்  சொந்த  நாட்டவரையே  காட்டிகொடுப்பவர்கள்   ஆவர்.

“மக்கள்  அளித்த   அதிகாரத்தைக்  கவிழ்க்குமாறு    வெளிநாடுகளை  வேண்டிக்கொள்வது    நாட்டுப்பற்றுள்ளவர்களின்   செயலல்ல”,  என்றாரவர்.  இன்று  காலை  கோலாலும்பூர்  புத்ரா   உலக   வாணிக   மையத்தில்   ஐசிஏபிபி  மாநாட்டில்  கலந்துகொள்ள   ஆசியா  முழுவதிலுமிருந்து    வந்திருந்த  3,000-த்துக்கு  மேற்பட்ட   பேராளர்களிடையே   உரையாற்றியபோது    நஜிப்  இவ்வாறு  கூறினார்.