பசுபதிக்கு முழுமையான ஆதரவு – தமிழ் அறவாரியம் தலைவர் அறிவிப்பு

 

KONICA MINOLTA DIGITAL CAMERAமலேசியாவில் ஆமைகளாக இருக்கும் தமிழ்ப்பள்ளிகளை யானைகளாக்குவோம். அப்பள்ளிகளில் பயில்கின்ற  மாணவர்களின் மேம்பாட்டையும் வளர்ச்சியையும் இமயத்தின் உச்சிக்கு மேல் உயர்த்துவோம் என்ற வாய்வீச்சுகள் இந்நாட்டில் ஏராளம் என்பதை நாம் அறிவோம்.

ஆனால், தமிழ்ப்பள்ளிகள் மற்றும் அப்பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள், அப்பள்ளிகளை நிருவாகம் செய்யும் ஆளுநர் வாரிய உறுப்பினர்கள் ஆகிய அனைவரின் செயலாக்க திறனை உயர்த்துவதையும்  ஏழ்மையில் சிக்கி பல வகையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த,  பள்ளிப்படிப்பை பாதியில் விட்டுவிடும், மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து அவர்களின் நல்லதோர் எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்டுவதையும் தமது மூச்சாகக் கொண்டிருப்பவர் தமிழ் அறவாரியத்தின் உறுப்பினரும் முன்னாள் தலைவருமான பசுபதி சிதம்பரம் என்பதை தமிழ் அறவாரியத்தின் உறுப்பினர்கள் மற்றும் அதன் செயலவை உறுப்பினர்கள் சார்பில் அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நம்மிடையே நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணுவோர், கூறுவோர் பலர் இருக்கின்றனர். ஆனால், அதை தன்னலம் கருதாமல் செய்து காட்டுபவர் சிலரே. அச்சிலரில் பசுபதி ஒருவர்.

1982இல் பல்கலைக்கழக மாணவராக இருந்த போதே,  VTCG என்ற தன்னார்வ குழுவுடன் நாடு தழுவிய அளவில் மூன்றாம் படிவ மாணவர்களுக்கு இலவசக் கல்வி திட்டத்தில் ஈடுபட்டவர். அதன் பிறகு இடபுல்யுஆர்எப் என்ற அமைப்பின் தலைவராக பசுபதி இருந்த போது அவர் தமிழ் அறவாரியதின் உறுப்பினராகவும் இருந்தார். தமிழ் அறவாரியம் இயங்குவதற்கு வசதியான ஓர் இடம் இல்லாத நேரத்தில் தமது கட்டடத்தில் ஒரு முழு மாடியையும் தமிழ் அறவாரியத்தின் அலுவலமாக செயல்பட வழங்கினார். இன்றும் தமிழ் அறவாரியம் அங்கிருந்துதான் செயல்பட்டு வருகிறது. தமிழ் அறவாரியத்தின் தலைவராக இருந்த காலத்தில் பல புதிய திட்டங்களை முன்மொழிந்து அவற்றை தீவிரமாக அமல்படுத்தியவர் பசுபதி. அவற்றில் மிக முக்கியமானவை “பாஸ்” மற்றும் “இம்பாக்” என்ற திட்டங்களாகும். இந்த இரண்டு திட்டங்களும் இன்று தமிழ்ப்பள்ளி சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி தமிழ்ப்பள்ளிகள் மீதான அவர்களின் ஈடுபாட்டை வலுப்படுத்தியுள்ளது.

“இம்பாக்” திட்டத்திற்கு பிரதமர் துறையின் பொருளாதார திட்டமிடல் பிரிவு (Economic Planning Unit) அங்கீகாரம் அளித்து, நிதி உதவியும் செய்துள்ளது. மேலும், ஜிபிஎம் என்ற அமைப்பில் உறுப்பியம் பெற்றுள்ள மலாய்க்காரர் அமைப்புகள் “இம்பாக்” திட்டத்தை தேசிய மொழியில் மொழியாக்கம் செய்து செயல்படுத்தத் துவங்கியுள்ளனர்.

இன்னும் பலவற்றை செய்துள்ள பசுபதி, பல காரணங்களால் பல வகையில் பாதிக்கப்பட்ட இந்திய இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவதற்காக தமது சுயமுயற்சியில் “மைஸ்கில்ஸ்” என்ற தொழில் பயிற்சி கூடத்தை நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். பேச்சுத் திறனற்ற ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு பேக்கரி துறையில் பயிற்சி அளித்து மை ஸ்கில்ஸ் அமைத்துள்ள பேக்கரி பிரிவுக்கு இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்!

அன்று, இந்தியாவில் கடல் வாணிபத்தில் ஈடுபட்டிருந்த இந்தியர்களுக்கு பல இன்னல்களை ஏற்படுத்தி அவர்களை முடக்கும் நடவடிக்கைகளில் பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். பிரிட்டீஷாரின் இந்த நடவடிக்கையை முறியடிப்பதற்காக கோகலே போன்ற சில இந்தியத் தலைவர்களின் ஒத்துழைப்போடு கப்பல் விட்டார், அந்த சிதம்பரம்!

இங்கே, இந்த நாட்டிலே உழைத்து ஓடாகி நிற்கும் இந்தியர்களின் குழந்தைகள் ஒரு தொழிலைக் கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் நல்லதோர்PasupathyS வாழ்க்கையை அமைத்துக்கொள்ள அவர்களுக்கு இந்த நாட்டின் அரசாங்கம் கொள்கை வழியான  திட்டங்கள் எதையும் செய்யவில்லை. அரசாங்கம் செய்ய முன்வராத போதும்  என்னால் செய்ய முடியும் என்ற உணர்வுடன் நல்லுள்ளம் கொண்ட சிலரின் உதவியோடு சிலாங்கூர், துறைமுக நகரான போர்ட்கிள்ளானில் மைஸ்கில்ஸ் என்ற தொழில் பயற்சி “கப்பலை” ஓடவிட்டார் இந்நாட்டு சிதம்பரத்தின் மகன், பசுபதி என்று பறைச்சாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

“மைஸ்கில்ஸ்” என்ற ஒரு கப்பல் போதும் என்று நினைத்து இது சம்பந்தப்பட்ட தமது நடவடிக்கைகளை பசுபதி நிறுத்திக்கொள்ளவில்லை.

இன்று, சிலாங்கூர் மாநிலத்தில் களும்பாங் என்ற இடத்தில் 34 ஏக்கர் நிலத்தில்   ஒரு தொழில் பயிற்சி கல்லூரி உருவாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு பலர் உதவியுள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அதற்கான முதல் கல்லை எடுத்து முழுமூச்சாக உழைத்துக் கொண்டிருப்பவர் பசுபதி என்பதற்கு தமிழ் அறவாரியத்தை சார்ந்த நாங்கள் அனைவரும் நேரிடையான சாட்சிகள்.

களும்பாங்கில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த தொழில் கல்லூரி மாணவர்களில் ஒருவன் என்றாவது ஒரு நாள் ஒரு பெரும் கப்பலை உருவாக்கி அதற்கு “பசுபதி” என்று பெயரிட்டு மிதக்கவிடுவான் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

ஆக, பசுபதி யார்? தமிழ்ப்பள்ளிகளைப் பற்றிய, தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய அவரது சிந்தனைகள் யாவை? இதற்கான பதில்கள் தமிழ் அறவாரியத்தை சார்ந்த அனைவருக்கும் நன்கு தெரியும்.

தமிழ்ப்பள்ளிகளின் தோற்றத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் எண்ணம் பசுபதிக்கு இருந்ததே இல்லை என்பதை அவருடன் பல ஆண்டுகாலமாக தொடர்பு கொண்டு இணைந்து செயலாற்றி வந்த எனக்கும் தமிழ் அறவாரியத்தின் இதர தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் தெரியும்.

பசுபதி கலந்து கொண்டு கருத்துரைத்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மலேசிய தேசிய பல்கலைக் கழகத்தின் கித்தா-யுகேஎம் பிரிவைச் சேர்ந்தவர்களும் அவர்களுடன் இருந்த இதர பிரமுகர்களும் சிலர் கூறியிருப்பது போன்ற தவறான கருத்துகளை பசுபதி கூறவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். பசுபதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அவர் அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொள்வதாகவும் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.

மேலும், கலந்துரையாடலில் பசுபதி தெரிவித்த கருத்தை தவறாக பதிவு செய்து செய்தியாக வெளியிட்ட மலேசியாகினி அத்தவறை ஒப்புக்கொண்டுள்ளது. தமிழ் அறவாரியத்தின் தலைவர் என்ற முறையிலும் தமிழ் அறவாரிய செயல் குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் சார்பிலும், தமிழ்ப்பத்திரிகைகளின் கருத்துச் சுதந்திரத்தையும் விமர்சன கண்ணோட்டத்தையும் தமிழ் அறவாரியம் என்றுமே வரவேற்கும். ஆனால் இவற்றுக்கு அப்பாற்பட்ட வகையில் பசுபதி  மேல் சாட்டப்பட்டுள்ள அவதூறான பரப்புரைகளையும் செய்திகளையும் தமிழ் அறவாரியம் வன்மையாகக் கண்டிக்கிறது.  இந்தச் சூழலில் தமிழ் அறவாரியம் பசுபதியின் கருத்துக்களுக்கு தனது முழு ஆதரவை தெரிவிப்பதுடன், தமிழ் நாளேடுகள் தங்களது பணிகளை பொறுப்புடனும் சமூக உணர்வுடனும் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இராகவன் அண்ணாமலை, தலைவர், தமிழ் அறவாரியம்.

செப்டெம்பர் 5, 2016.