எதிர் முகாமுடன் இணக்கம் காணப்பட்டிருப்பதால் பினாங்கில் டிஏபி இடங்களைக் கைப்பற்ற மஇகா நம்பிக்கை கொண்டிருக்கிறது

subraமஇகா,   சர்ச்சைகளுக்குத்  தீர்வு  காணப்பட்டு   எதிர்முகாமில்  இருந்தோர்  மீண்டும்  கட்சியில்    இணைந்து  கொண்டிருப்பதால்   பினாங்கில்   டிஏபி  வசமுள்ள   பிறை,  பாகான்   டாலாம்  தொகுதிகளைத்   திரும்பக்  கைப்பற்ற  முடியும்  என   நம்புகிறது.

அவ்விரு  தொகுதிகளிலும்   வெற்றிபெற   மஇகா  வாக்காளர்களுடன்   அணுக்கமான   உறவுகளை  வளர்த்துக்  கொள்ளவும்     கட்சி   உறுப்பினரிடையே   ஒற்றுமையை   வலுப்படுத்தவும்  முனைந்திருப்பதாக      கட்சித்   தலைவர்  டாக்டர்  எஸ். சுப்ரமணியம்   கூறினார்.

“கட்சியை  வலுப்படுத்த  அடிநிலை   இந்தியர்களின்   ஆதரவுதான்  அடிப்படையாகும்”, என  சுப்ரமணியம்   நேற்று  70ஆம்  ஆண்டு  மஇகா   கொண்டாட்டங்களைத்   தொடக்கிவைத்தபோது  கூறினார்.

2008, 2013   பொதுத்  தேர்தல்களில்   பிறை   தொகுதியில்  பினாங்கு  துணை  முதலமைச்சர்  பி.இராமசாமியும்  பாகான்  டாலாம்   தொகுதியில்   ஏ.தனசேகரனும்   வெற்றி  பெற்றனர்.  இருவருமே  டிஏபி-யைச்   சேர்ந்தவர்கள்.

அத்தொகுதிகளைத்  திரும்பப்  பெற   மஇகா,   கடந்த   ஆண்டு   கட்சித்   தலைவர்   தேர்தலில்   ஏற்பட்ட    கடும்போட்டியில்  கட்சியை  விட்டு  விலகிச்  சென்றுவிட்ட    உறுப்பினர்களை  ஒன்றிணைக்கும்  முயற்சியில்  இறங்கியுள்ளது.